காம்பவுண்டிங் முறையில் நம்முடைய முதலீடு பல மடங்காக உயர்வதற்கு நாம் ஒரு கணிசமான கால அளவை வழங்க வேண்டும். இதற்காகத்தான் சிறுவயதிலேயே முதலீட்டை தொடங்கி விட வேண்டும் அப்படி தொடங்கினால் குறைந்த முதலீட்டு தொகையில் நாம் அதிக லாபத்தை காண முடியும் என முதலீட்டு நிபுணர்கள் தொடர்ந்து அறிவுரை வழங்குகின்றனர்.
சிறிய வயதிலேயே 3 லட்சம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒருமுறை முதலீடாக செய்தவருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும், ஓய்வு காலத்திற்கு சில ஆண்டுகளே இருக்கும் போது 30 லட்சம் ரூபாயை ஒருவர் லம்ப் சம் முதலீடாக செய்தால் அவருக்கு எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

ஆண்டுக்கு 12 சதவீதம் வளர்ச்சி அடைய கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் ஒரு நபர் 3 லட்சம் ரூபாயை லம்ப் சம் அதாவது ஒரே முறையாக முதலீடு செய்கிறார் என வைத்து கொள்வோம். இவருடைய பணம் 10 ஆண்டுகளில் 9,31,754 ரூபாயாக உயர்ந்திருக்கும், 20 ஆண்டுகளில் 28,93,888 ரூபாயாக மாறி இருக்கும். 30 ஆண்டுகளில் 89,87,977 ரூபாய் என வளர்ந்திருக்கும். இந்த நபர் 20 வயதிலேயே முதலீட்டை செய்து 60 வயதில் ஓய்வு பெறுகிறார் என்றால் 40 ஆண்டுகள் முடிந்து அவருக்கு கிடைக்கும் தொகை 2,79,15,291 ரூபாய். அதாவது 3 லட்சம் ரூபாய் 2.79 கோடியாக மாறி இருக்கிறது.
இதுவே 40 வயதான ஒருவர் 30 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு 12 சதவீதம் வளர்ச்சி அடையும் ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்கிறார் என்றால், 10 ஆண்டுகளில் 30 லட்சம் 93,17,545 ரூபாயாக இருக்கும், 20 ஆண்டுகளில் அதாவது அவருக்கு 60 வயதாகும் போது 2,89,38,879 ரூபாய் கையில் கிடைக்கும். ஆனால் இதற்கு அவர் செய்த முதலீடு 30 லட்சம் ரூபாய், இதையே அவர் 20 வயதிலேயே செய்திருந்தால் 3 லட்சம் ரூபாய் மட்டும் முதலீடு செய்து இதே தொகையை பெற்றிருக்க முடியும்.
இந்த உதாரணங்களிலேயே நமக்கு புரிந்து விடும், மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரை சிறு வயதிலேயே தொடங்கிவிட்டால், குறைந்த தொகையிலேயே பெரிய லாபம் காணலாம். வயது ஏற ஏற உங்களின் முதலீட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே தான் முதலீட்டு நிபுணர்கள் இளம் வயதிலேயே முதலீட்டை தொடங்குங்கள் என அறிவுரை வழங்குகின்றனர்.
ஏனெனில் வயது ஏற ஏற நமக்கு குடும்ப பொறுப்புகள் கூடி விடும் அந்த சமயத்தில் பெரிய தொகையை முதலீட்டுக்காக ஒதுக்குவது சிரமமாக இருக்கும். இதுவே வேலைக்கு செல்ல தொடங்கிய உடனே ஆரம்பித்துவிட்டால் சிறிய தொகை மூலம் பெரிய லாபம் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications