ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைப்பது எதற்காக? தங்களுக்குப் பிறகு தங்களுடைய குடும்பம் எந்தப் பிரச்சினையும் இன்றி வாழ வேண்டும் என்பதற்காகத்தான். எனவே ஒருவர் சேர்த்து வைத்த தங்கம், பணம், சொத்து, முதலீடு என எதுவாக இருந்தாலும் சரி அது உரியவருக்கு சென்றடைய வேண்டும். அதற்கு முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். ஒருசிலர் உயில் மட்டும் எழுதிவிட்டால் போதும்.. தனக்குப் பிறகு தன்னுடைய சொத்து வாரிசுகளுக்கு சென்று விடும் என்று நினைக்கின்றனர்.
ஒருவருடைய சொத்து யாருக்கு செல்ல வேண்டும் என்பதற்கான சட்டப்பூர்வ ஆதாரமாக உயில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒருவருடைய வங்கி கணக்கு, முதலீட்டு லாபம் போன்றவையும் உரியவருக்கு செல்ல வேண்டுமானால் அதற்கு நாமினேஷன் மிக மிக முக்கியம்.

வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கணக்கு வைத்திருக்கும் உரிமையாளர் இறந்த பிறகு அவருடைய பணம் அல்லது முதலீடு யாருக்கு செல்ல வேண்டும் என்பதற்கு சாட்சியாக அவர் உயிருடன் இருக்கும் போதே நாமினியை நியமிக்க வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் டிமேட் கணக்குகளில் இருக்கும் தொகையை பெறுவதற்கு செபி விதிகளின்படி கண்டிப்பாக நாமினி தேவை. ஒருவேளை நாமினியை நியமிக்கவில்லை என்றால் உங்களுடைய சட்டப்பூர்வ வாரிசுகளே உங்கள் பணத்தை எடுப்பதற்கு அலைந்து திரிய வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
நாமினேஷனால் ஏற்படும் பிரச்சனைகள்: நாமினி என்பவர் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருப்பார். உதாரணமாக நீங்கள் திருமணமாகாமல் வீட்டில் இருக்கும்போது உங்கள் பெற்றோரையே நாமினியாக வைத்திருப்பீர்கள். வங்கி கணக்கு, முதலீட்டு திட்டங்கள், பிஎஃப் கணக்கு என அனைத்திற்கும் உங்கள் பெற்றோரின் பெயரை கொடுத்திருப்பீர்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு அதை ஒரு சிலர் மாற்றுவார்கள். சிலர் மாற்றாமலும் இருப்பார்கள். இதையெல்லாம் சரியாக கவனிக்க வேண்டும்.
அதேபோல சகோதரி மற்றும் சகோதரரை நாமினியாக வைத்திருப்பவர்கள் திருமணத்திற்கு பிறகு தங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தங்கள் பணம் சேர வேண்டும் என்று விரும்பலாம். ஒரு சில நேரங்களில் 5, 6 வருடங்களுக்கு முன்பு கணக்கு திறக்கும் போது நீங்கள் நியமித்த நாமினி துரதிஷ்டவசமாக இறந்து போயிருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில் நாமினியால் பல பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே உயில் எழுதுவது எவ்வளவு முக்கியமோ? அதே போல வங்கி கணக்கு, உங்கள் முதலீடுகள் மற்றும் நிதி நிறுவனங்களில் நீங்கள் செய்திருக்கும் முதலீடு ஆகியவற்றுக்கு சரியான நாமினியை தான் நியமித்திருக்கிறீர்களா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இதை செய்யாமல் விட்டால் பணத்தை பெறுவதில் தாமதம் ஏற்படுவதோடு குடும்பத்திற்குள்ளேயே மனக்கசப்புகள் வரவும் வாய்ப்புள்ளது.
நாமினியை நியமிப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன?: நீங்கள் சட்டப்பூர்வ வாரிசுகளை நியமிப்பீர்கள். அந்த பெயர் உங்களுடைய மற்ற முதலீட்டுக்கோ அல்லது வங்கி கணக்கிற்கோ பொருந்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு கணக்கில் நாமினியை மாற்றி விட்டால் அது அப்படியே மற்ற கணக்குகளுக்கு மாறாது.
வங்கி கணக்கு, ஃபிக்சட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், டிமேட் கணக்கு இன்சூரன்ஸ், பிஎஃப் மற்றும் உங்களுடைய இதர சேமிப்புகள் என அனைத்திற்கும் தனித்தனியாக நாமினியை நியமிக்க வேண்டும். நீங்கள் இவை அனைத்திலும் ஒரே நபரையும் நியமிக்கலாம் அல்லது வெவ்வேறு நபரையும் நியமிக்கலாம். அது முழுக்க முழுக்க உங்களுடைய விருப்பத்தைப் பொறுத்தது.
அதேபோல திருமணம், விவாகரத்து போன்ற சூழலில் உடனடியாக உங்கள் கணக்குகளில் நாமினியை அப்டேட் செய்வது முக்கியம். இதில் எந்த மாற்றமும் இல்லை சரியாகத்தான் நியமித்திருக்கிறீர்கள் என்றாலும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்குகளை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சிலர் தாங்கள் செய்த முதலீடு மற்றும் வாங்கி வைத்த சொத்தை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தாமல் விட்டுவிடுவார்கள். இதனால் இறப்புக்கு பிறகு அவர்கள் குடும்பத்தால் உரிமை கோர முடியாமல் போகலாம். சமீபத்தில் ஆர்பியை கிட்டத்தட்ட ரூ.87,000 கோடி உரிமை கோரப்படாத தொகை இருப்பதாக தெரிவித்தது. இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் வைத்திருக்கும் வங்கி கணக்கு, முதலீடு மற்றும் முக்கிய ஆவணங்களை ஒரு பட்டியலாக தயாரித்து குடும்பத்திடம் கொடுங்கள்.
ஒருவருடைய மறைவுக்குப் பிறகு அவர்களுடைய குடும்பம் எந்த சட்ட சிக்கலையும் சந்திக்கக் கூடாது என்றால் அதற்கு மேலே கூறப்பட்டுள்ள நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.


Click it and Unblock the Notifications
