இந்த வாரம் இந்திய பங்கு சந்தையில் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாத நிலவரம் காணப்படுகிறது. அதனடிப்படையில் 4 புதிய நிறுவனங்கள் பங்கு வெளியீடுகளுக்கு (IPO) தயாராகி உள்ளது . டன்வால் ஈ-மோட்டார்ஸ் லிமிடெட், கதாரியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மேகோப்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் மற்றும் சான்ஸ்டார் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இந்த வாரம் பங்கு வெளியீடு (IPO) மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளன.
டன்வால் ஈ-மோட்டார்ஸ் லிமிடெட்: மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டன்வால் ஈ-மோட்டார்ஸ் லிமிடெட் திங்கள் கிழமை முதல் IPO வெளியிடுகிறது. இதன் பங்கின் விலை ரூ. 59 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய பங்கு வெளியீடு மூலம் ரூ.115.6 கோடி நிதி திரட்ட இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இதில் ரூ.1.38 கோடி புதிய பங்குகளின் வெளியீடும், 57.5 லட்சம் பங்குகளுக்கு விற்பனை சலுகையும் வழங்குகிறது.

திரட்டப்படும் நிதியை, நிறுவனத்தின் செயல்பாடுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் மற்றும் வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்ல இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கதாரியா இண்டஸ்ட்ரீஸ்: கதாரியா இண்டஸ்ட்ரீஸ் திங்கள்கிழமை அன்று பங்கு வெளியீட்டைத் தொடங்குகிறது. இதன் மூலம் ரூ. 54.6 கோடி திரட்ட இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. ஒரு பங்கின் விலை ரூ. 91 முதல் ரூ. 96 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் கம்பிகள், நங்கூரமிடும் அமைப்புகள், உறை குழாய்கள், கப்ளர்கள் மற்றும் அலுமினிய கண்டக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை வழங்குகிறது.
மேகோப்ஸ் டெக்னாலஜிஸ்: அதே நாளில், டிரிம்மர்கள், செல்ஃப் கேர் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான மேகோப்ஸ் டெக்னாலஜிஸ் அதன் IPO-வைத் திறக்க திட்டமிட்டுள்ளது. ரூ. 25.95 லட்சம் பங்குகளை புதிதாக வெளியிடுவதன் மூலம் ரூ.19.5 கோடியை திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் பொது வெளியீட்டிற்கு ஒரு பங்கின் விலை ரூ. 71 முதல் ரூ. 75 வரை நிர்ணயித்துள்ளது.
சான்ஸ்டார்: வாரத்தின் கடைசி நாளில், சான்ஸ்டார் நிறுவனம் தனது பங்கு வெளியீட்டை ரூ.90 முதல் ரூ. 95 வரையிலான விலையில் தொடங்கவுள்ளது. இதன் மூலம் நிறுவனம் ரூ. 510.1 கோடியை திரட்ட இலக்கு வைத்துள்ளது.
இந்த வாரம் பங்கு முதலீட்டாளர்களுக்கு பரபரப்பான சந்தை நிலவரம் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த புதிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் நுழைவதைக் காண முடிகிறது. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் பற்றி ஆய்வு செய்வது அவசியம்.


Click it and Unblock the Notifications