அதானி குழும பங்குகள் இந்திய பங்கு சந்தையில் கடந்த ஜனவரி 24ல் இருந்தே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக சிங்க நடை போட்டு வந்த அதானி குழுமம், இன்று பெரும் சரிவினை கண்டு வருகின்றது.
சீட்டுக் கட்டில் ஒரு சீட்டினை உருவினால் எப்படி அடுத்தடுத்த சீட்டுகள் சரியுமோ? அப்படி அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட ஒற்றை அறிக்கையால், கடந்த சில வாரங்களாகவே அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன.
பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு
ஜனவரி 24 அன்று அதானி குழுமத்தின் மீது ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது குற்றம் சாட்டியது. இதன் காரணமாக அன்று முதல் இன்று வரையில் அதானி குழும பங்குகள் பெரும் வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றன.
ஹிண்டர்ன்பர்க்கின் இந்த ஒற்றை அறிக்கையால், அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளன. குறிப்பாக அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பல பங்குகள் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளன.
எவ்வளவு இழப்பு தெரியுமா?
இந்த சரிவுகளுக்கு மத்தியில் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பானது 145 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ளது.
அதானி குழுமம் தங்களது பங்குகளை உயர்த்தி காட்ட, பல மோசடியான செயல்களில் ஈடுபட்டதாக ஹிண்டர்ன்பர்க் அறிக்கை கூறியது,. குறிப்பாக ஷெல் நிறுவனங்கள் மூலம் போலியான நிதி அறிக்கை, மோசடியான பணப்பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு என பல குற்றச்சாட்டுகலை முன் வைத்தது.
நன்கு ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை
ஹிண்டர்ன்பர்க்கின் இந்த அறிக்கையானது வெளியானதில் இருந்து அதானி குழும பங்குகள் சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதானி குழுமமோ அதனை மறுத்துள்ளது. அதானி குழுமம் ஹிண்டர்ன்பர்க்கின் அறிக்கையினை மறுத்துள்ள நிலையில், இது பொய்யான அறிக்கை என குற்றம் சாட்டியது. ஆனால் ஹிண்டர்ன்பர்க் நிறுவனமோ இது இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்து எடுக்கப்பட்ட ஒரு அறிக்கை என அடித்து கூறியது.
தடதட சரிவு
ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது பொய்யானது என அதானி குழுமம் என்று கூறினாலும், இது உண்மைதானோ எனும் அளவுக்கு அதானி குழும பங்குகள் தடதடவென சரிவினைக் கண்டு வருகின்றன. இந்த சரிவானது இனி எங்கு நிற்கும் என்பதும் பெரிய கேள்வியாய் எழுந்துள்ளது.
ரூ.12 லட்சம் கோடி காலி
இப்படி பலத்த சரிவுகளுக்கு மத்தியில் அதானி குழும பங்குகளின் சந்தை மூலதனம் என்பது. 11,99,256.66 கோடி ரூபாய் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
வெள்ளிகிழமை நிலவரப்படி இதன் சந்தை மதிப்பு 7,20,632 கோடி ரூபாயாக உள்ளது. இது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மதிப்புக்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி 24 அன்று இதன் மதிப்பு 19,19,888 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் சரியலாம்
தற்போது வரையில் இந்த சரிவுக்கு அதானி குழுமம் ஒரு முற்றுப்புள்ளி வைத்ததாகவும் தெரியவில்லை. சொல்லப்போனால் இன்னும் இந்த பங்குகள் எந்த அளவுக்கு சரியுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. நிபுணர்களும் அதானி குழும பங்குகளில் இருந்து விலகியே இருக்க கூறும் நிலையில், இது மேற்கோண்டு சரியலாம் என்ற உணர்வே உள்ளது. ஆக அதானி குழுமத்தின் மதிப்பு மேலும் சரியலாம் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.


Click it and Unblock the Notifications