இந்தியாவின் பெரும் பணக்காரரான கௌதம் அதானியின் அதானி பவர் நிறுவனம் முதல் முறையாக பங்கு பிரிப்பு (stock split) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்பாக இருந்தாலும் ஜூன் காலாண்டு முடிவில் கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளது.
அதானி பவர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இன்று அதானி பவர் பங்குளை 1:5 என்ற விகிதத்தில் இந்த பிரிக்க ஒப்புதல் அளித்துள்ளது, அதாவது ஒரு பங்கின் முக மதிப்பு ரூ.10-இல் இருந்து ஐந்து பங்குகளாக ரூ.2 வீதம் பிரிக்கப்படும்.

இந்த முடிவை பங்குச்சந்தைக்கு இந்நிறுவனம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் "நிறுவனத்தின் பங்குகளின் புழக்கத்தை அதிகரிக்கும் நோக்குடன் பங்குகளை மலிவாக்கி சிறு முதலீட்டாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் 1:5 அடிப்படையில் பங்குகளை பிரிக்க நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பங்கு சந்தையில் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வாய்ப்பு உருவாகும்.
இன்று ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட அதானி பவர் நிறுவனம் நிகர லாபமாக 3,305.13 கோடி ரூபாயை அறிவித்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் 15.5 சதவீதம் குறைவாகும். இதுவே காலாண்டு அடிப்படையில் பார்க்கும் போது 27.2 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் இக்காலாண்டில் வருவாய் அளவும் 5.7 சதவீதம் குறைந்து 14,109.15 கோடி ரூபாயாக உல்ளது.
மேலும் வாரத்தின் இறுதி நாளான இன்று, வர்த்தகத முடிவில் 3.86 சதவீதம் சரிந்து 565.40 ரூபாய் அளவில் முடிந்துள்ளது. மோசமான காலாண்டு முடிவுகள் மூலம் பங்கு பிரிப்பின் எதிரொலி மொத்தமாக மறைந்துள்ளது. இருப்பினும், 2025-இல் இந்த பங்கு இதுவரை சுமார் 10% உயர்ந்துள்ளது மற்றும் கடந்த ஆறு மாதங்களில் 15% அளவுக்கு வளர்ச்சியை அடைந்துள்ளது, மேலும் கடந்த ஒரு மாதத்தில் 2% சரிந்துள்ளது. இதன் P/E விகிதம் தற்போது 16.85 ஆக உள்ளது.
பங்கு பிரிப்பு மற்றும் முதலீட்டாளர் பயன்:
பங்கு பிரிப்பு என்பது ஒரு நிறுவனத்தின் சந்தை மூலதனத்தை மாற்றாமல், வெளியிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். உதாரணமாக, ஒரு முதலீட்டாளர் தற்போது ரூ.100 மதிப்பில் 10 பங்குகளை வைத்திருந்தால், பங்கு பிரிப்பு நடந்த பின் அவருக்கு 50 பங்குகள் ரூ.20 வீதம் கிடைக்கும், ஆனால் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.1000 என்பதில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.
இத்தகைய பங்கு பிரிப்பு ஒரு நிறுவனத்தின் அடிப்படை மதிப்பை மாற்றாது, ஆனால் திரவத்தன்மையை அதிகரிக்கும். விலை குறையும் காரணத்தால் சிறு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வாய்ப்பை உருவாக்கும். பங்கு பிரிப்புக்கான தேசியை இன்னும் அதான் பவர் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications