ஆதித்ய பிர்லா லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ் லிமிடெட் (ABLBL) நிறுவன பங்குகள் இன்று டீமெர்ஜர்-க்கு பின்பு மும்பை பங்குச்சந்தை மற்றும் தேதிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. இதன் பங்கு விலை மும்பை பங்குச்சந்தையில் ரூ.167.75 ஆகவும், NSE-யில் ரூ.167 ஆகவும் தொடங்கியது.
மே 2025-ல் ஆதித்ய பிர்லா ஃபேஷன் அண்ட் ரீடையில் (ABFRL) நிறுவனத்திலிருந்து பிரிக்கப்பட்ட ABLBL, ரூ.171 பங்கு மதிப்பீட்டில் ரூ.21,000 கோடி சந்தை மூலதனத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் பேஷன் மற்றும் லைப் ஸ்டைல் துறை, குறிப்பாக ஃபாஸ்ட் பேஷன் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், தற்போது ஆதித்ய பிர்லா லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ் தனியாக பிரிந்தது மூலம் இரு நிறுவனங்களும் அதன் உண்மையான மதிப்பை சந்தையில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியாக பிரிக்க என்ன காரணம்: ABLBL தனியாக பிரிக்கப்பட்டு, உயர்தர லைப்ஸ்டைல் பிராண்ட்களை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம், லூயிஸ் பிலிப், வான் ஹியூசன், ஆலன் சோலி, மற்றும் பீட்டர் இங்கிலாந்து ஆகிய முன்னணி பிராண்ட்களையும், வான் ஹியூசன் இன்னர்வேர், ரீபாக், மற்றும் அமெரிக்கன் ஈகிள் ஆகிய வளர்ந்து வரும் பிராண்ட்களையும் கொண்டு உள்ளது.
ABFRL கீழ் இனி பாண்டலூன்ஸ் போன்ற பிற வணிகங்களையும், ஆன்லைன் வர்த்தகம், கடைகளுக்கான சப்ளை ஆகியவற்றை தக்கவைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது பிர்லா குழுமம். இந்த வர்த்தக பிரிப்பு மற்றும் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதன் மூலம், இரு பிரிவின் முதலீட்டு மதிப்பையும், வாய்ப்பையும் அதிகரிக்க முடியும், மேலும் இது நிறுவன கட்டமைப்பை மேம்படுத்தவும் பயன்பட உள்ளது.
ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஆடை மற்றும் லைப்ஸ்டைல் பிரிவில் சுமார் 3250 கடைகள் இயங்கி வருகிறது, இதன் மூலம் இந்தியாவில் சுமார் 46 லட்சம் சதுரடி அளவிலான ரீடைல் வர்த்தக இடத்தை கொண்டுள்ளது. இதில் 70 சதவீத கடைகள் பிரான்சைசி முறையில் இயங்கி வருகிறது, மற்ற கடைகளை சொந்தமாக நடத்துகிறது. இதுதவிர ஆன்லைன் தளத்திலும் விற்பனை செய்கிறது ஆதித்யா பிர்லா பேஷன்.
ABFRL நிறுவனத்தில் இருந்து ஆதித்ய பிர்லா லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில் உள்நாட்டு தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால், ABLBL-க்கு நியூட்டரல் மதிப்பீட்டுடன் ரூ.190 விலை இலக்கை வழங்கியுள்ளது.
மேலும் அடுத்த 3 வருடத்தில் அதாவது 2025 முதல் 2028 நிதியாண்டின் ஆதித்யா பிர்லா லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ் ஆண்டுக்கு சுமார் 10% வருவாய் வளர்ச்சி (CAGR) எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சி அளவீட்டை இந்நிறுவனம் புதிதாக திறக்கப்பட உள்ள 700 கடைகள், கடையின் வர்த்தக அளவு, மற்றும் வளர்ந்து வரும் பிராண்ட்களின் விரிவாக்கம் ஆகியவற்றால் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ABLBL நிறுவனம் புதிதாக திறக்கப்படும் 700 கடைகள் இந்தியாவின் நகர்ப்புற மற்றும் சிறு நகரங்களில் திறக்கப்படும் காரணத்தால் வர்த்தகம் வேமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications