உலக பொருளாதார மந்த நிலை, அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்புகள் என பல சவால்களை எதிர்கொண்டிருக்கும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பூதாகரமாக அமைந்துள்ளது ஒரு ஆய்வறிக்கை. இது வெளியானது முதலே ஐடி நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்க டெக் பங்குகளுக்கும் இது தான் நிலைமை. The 2028 Global Intelligence Crisis: A Thought Exercise in Financial History, from the Future என்ற சிட்ரிணி ரிசர்ச் அறிக்கை தான் இதற்கெல்லாம் காரணம்.
வால் ஸ்ட்ரீட் முதல் தலால் ஸ்ட்ரீட் வரை இந்த அறிக்கை பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் ஐ.பி.எம். (IBM) கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத மோசமான வர்த்தக நாளைக் கண்டது. இந்தியாவிலும், விப்ரோ, இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். போன்ற முக்கிய தொழில்நுட்பப் பங்குகள் செவ்வாய்க்கிழமை வணிகத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

சிட்ரிணி ரிசர்ச், 2023-இல் நிறுவப்பட்ட ஒரு சிறிய ஆய்வு நிறுவனம். ஜேம்ஸ் வான் கீலன் இதன் நிறுவனர். இவர் லோட்டஸ் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியான அலாப் ஷாவுடன் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஏஐ வளர்ச்சி தொடர்ந்தால் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை அவர்கள் இதில் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிக்கை இந்தியப் பொருளாதாரத்திற்கு ஓர் இருண்ட எதிர்காலத்தைக் கணித்துள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை பெரும்பாலும் சேவை அடிப்படையிலானது. ஆனால், ஏஐ கோடிங் இந்த வணிகத்தில் புரட்சி செய்வதால், உலக நிறுவனங்கள் இந்திய தொழில்நுட்பத் துறையை சார்ந்திருப்பது குறையும். "ஏஐ கோடிங் மூலம் டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகியவைக்கான வணிக ஒப்பந்தங்கள் ரத்தாகும் “ என சிட்ரிணி ஆய்வு கூறுகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடையும். "இந்தியாவின் வெளிநாட்டு கணக்குகளில் நிலைத்தன்மையை அளித்த ஐடி துறை வீழ்ச்சி இதற்கு காரணம்” என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதே வேளையில் பெரும்பாலான சேவைத் துறைகள் ஏஐ கருவிகள் மூலம் செயல்பட்டாலும், மனிதர்களின் பங்களிப்பு இன்னும் தேவைப்படும். ஏஐ புதிய வேலைகளை உருவாக்கும். "ப்ராம்ட் என்ஜினியர்கள், ஏஐ பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் போன்றோர் தேவை" என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அதிக மக்கள் வேலை இழப்பதால், நுகர்வோர் செலவினம் குறைந்து பொருளாதாரம் பாதிக்கப்படும். ஏஐ பயன்பாட்டினால் கிடைக்கும் லாபங்களுக்கு வரி விதிப்பது, இந்த பாதிப்பைப் புரிந்துகொள்ள உதவும் புதிய சமூகக் கட்டமைப்புகளையும் கொள்கைகளையும் உருவாக்க உதவும் என்று அறிக்கையில் கூறுகின்றனர்.
"சந்தைகளில் நாம் மிகவும் நிலையற்ற காலத்திற்குள் நுழைகிறோம்," என்று ஷா ப்ளூம்பெர்க் டி.வி.யிடம் தெரிவித்துள்ளார். "இயந்திர நுண்ணறிவு தொடர்ந்து துரிதப்படுத்தப்படும்; மனித நுண்ணறிவின் மதிப்பு குறையும்," என்று சிட்ரிணி ரிசர்ச் அறிக்கை முடிவில் குறிப்பிட்டது. இருப்பினும், இந்த அறிக்கை முதலீட்டாளர்களை அச்சுறுத்தினாலும், அனைவரும் நம்பவில்லை. சிகாகோ பேராசிரியர் அலெக்ஸ் இமாஸ் தனது குறிப்பில், "எதிர்மறை ஜி.டி.பி. வளர்ச்சிக்குத் தேவையான நிபந்தனைகள் மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றுகின்றன" என்றார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications