பங்குச்சந்தையில் பல மடங்கு லாபம் பார்க்க முடியும் என்ற ஆசையில் பல முதலீட்டாளர்கள் டெரிவேட்டிவ்ஸ் சந்தையில் பணத்தை கொட்டி வருகின்றனர். இதில் லாபம் பெற்றவர்களை விட நஷ்டம் அடைந்தவர்களின் என்ணிக்கை தான் அதிகம். இந்தியாவின் டெரிவேட்டிவ்ஸ் சந்தையில் 10-ல் 9 வர்த்தகர்கள் பணத்தை இழக்கின்றனர், ஆனால் இப்பிரிவில் அதிகம் லாபம் பெற்று வெற்றி பெறுவது பெரும்பாலும் ஜேன் ஸ்ட்ரீட் போன்ற பெரு நிறுவனங்கள் தான்.
Jane Street Capital - இந்த அமெரிக்க ஹெட்ஜ் ஃபண்ட், அதிவேக அல்காரிதங்களை பயன்படுத்தி, நிமிடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் செய்கிறது. இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் மட்டும் 2.3 பில்லியன் டாலர் (19662.7 கோடி ரூபாய்) லாபத்தை ஈட்டியுள்ளன. ஆனால் இந்த நிறுவனத்தை செபி விசாரித்து வருகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?
டெரிவேட்டிவ்ஸ் சந்தையில் முதலீட்டாளர்கள் பணத்தை இழப்பதற்கும் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு..? செபி அமைப்பு ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்தை எதற்காக விசாரிக்கிறது..?

டெரிவேட்டிவ்ஸ் சந்தையில் இழப்பு:
ஜேன் ஸ்ட்ரீட் போன்ற நிறுவனங்கள், அதிவேக அல்காரிதங்களைப் பயன்படுத்தி டெரிவேட்டிவ்ஸ் சந்தையில் நிமிடங்களில் பெரும் லாபத்தை ஈட்டுகின்றன. இந்நிறுவனம், இந்தியாவில் 2.3 பில்லியன் டாலர் லாபம் பெற்றதாகவும், இதேபோல் மில்லினியம் மேனேஜ்மென்ட் என்ற மற்றொரு நிறுவனம் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபம் ஈட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெரிவேட்டிவ்ஸ் ஒரு zero-sum விளையாட்டு என்பதால், ஒருவர் லாபம் பெற, மற்றவர் இழக்க வேண்டும், இதில் பெரும்பாலும் ரீடைல் முதலீட்டாளர்கள் இழப்பை சந்திக்கின்றனர்.
செபியின் விசாரணை எதற்காக?:
செபி, கடந்த மூன்று ஆண்டுகளாக ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகங்களை ஆய்வு செய்து வருகிறது. இந்நிறுவனம், நிஃப்டி-50 மற்றும் பேங்க் நிஃப்டி ஆப்ஷன்களில் பெரிய அளவிலான பொசிஷன்களை எடுத்து, சந்தை குறியீடுகளை 0.01% அளவுக்கு சரியை முக்கிய காரணமாக உள்ளது. இதனால் இந்த நிறுவனம் ஆர்பிட்ரேஜ் லாபம் பெறுவதாக செபி சந்தேகிக்கப்படுகிறது.
செபி அமைப்பு பொதுவாக ரூ.1,000 கோடி தினசரி வர்த்தக வரம்பை எட்டும் நிறுவனங்களை கட்டம் கட்டி ஆய்வு செய்யும், இந்த வகையில் இந்நிறுவனம் அடிக்கடி மீறுவதாகவும் கூறப்படுகிறது. இந்திய சட்டப்படி, பெரிய பொசிஷன்கள் எடுப்பது தடைசெய்யப்படவில்லை என்றாலும், சந்தை நியாயத்தை உறுதி செய்ய செபி இந்த விசாரணையை மேற்கொள்கிறது.

ஜேன் ஸ்ட்ரீட் வர்த்தக உத்தி:
ஜேன் ஸ்ட்ரீட், அதிவேக அல்காரிதங்களைப் பயன்படுத்தி, நொடிகளில் கோடிக்கணக்கான வர்த்தகங்களை செய்கிறது. எடுத்துக்காட்டாக, நிஃப்டி-50 குறியீடு சிறிது உயரும் என ஆப்ஷன் சந்தையில் பெட்டிங் வைத்தால், இக்குறியீட்டில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை இந்த நிறுவனமே ரெகுலர் மார்க்கெட்டில் வாங்கி செயற்கையாக குறியீட்டை உயர்த்துகிறது.
இந்த சிறு மாற்றம், அதிக லெவரேஜ் கொண்ட டெரிவேட்டிவ்ஸ் சந்தையில் பெரும் லாபத்தை அளிக்கிறது. ரீடைல் வர்த்தகர்கள் இதை சுதாரித்துக்கொண்டு வர்த்தகத்தை மாற்றுவதற்குள் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் லாபத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கிளம்பிடும். இது சந்தையை சரிவுக்கு தள்ளுக்கிறது, முதலீட்டாளர்களை நஷ்டத்தில் ஆழ்த்துகிறது.
இதை தான் செபி தற்போது முக்கியமான பிரச்சனையாக பார்க்கிறது. ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் எப்படி வர்த்தகம் செய்தது என்பதை ஆய்வு செய்யவே தற்போது களத்தில் இறங்கியுள்ளது. இத்தகைய வர்த்தகத்தில் வேகம் முக்கியம் என்பதால் அனைத்து நிறுவனத்திடம் இத்தகைய தொழில்நுட்பமோ அல்லது அல்காரிதமோ இருக்காது. இதுதான் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் ஸ்பெஷல்.
ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் 2024 சர்ச்சை:
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்திற்கு சக போட்டியாளர் என்றால் மில்லினியம் மேனேஜ்மென்ட் நிறுவனம்.
2024-ல், ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் மில்லினியம் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு மாறியதால், அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தான், இந்திய டெரிவேட்டிவ்ஸ் சந்தையில் ஜேன் ஸ்ட்ரீட்டின் 2.3 பில்லியன் டாலர் லாபத்தையும், மில்லினியம் மேனேஜ்மென்ட் நிறுவனம் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபத்தை பெற்றது வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
இந்த பெரும் லாபங்கள் தான் ரீடைல் வர்த்தகர்களின் பெரும் இழப்புக்கு முக்கிய காரணமாக இருக்க கூடும் என செபி சந்தேகிக்கிறது, இது விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த விசாரணையில் முடிவில் டெரிவேட்டிவ்ஸ் சந்தையில் High Frequency டிரேடிங் முறைக்கு கட்டுப்பாடு விதிக்கலாம், அல்லது பெட்டிங் அளவில் கட்டுபாட்டை விதிக்கலாம் என கருத்து நிலவுகிறது.

ரீடைல் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு:
இந்தியாவின் டெரிவேட்டிவ்ஸ் சந்தை, உலகின் மிக பரபரப்பான ஆப்ஷன் சந்தையாக 2024-ல் திகழ்ந்தது, இதற்கு பெரு நிறுவனங்களின் பங்கு முக்கியம். ஆனால், பெரிய பொசிஷன்கள் எடுக்கும் நிறுவனங்கள், சந்தையை பாதித்து, ரீடைல் வர்த்தகர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன.
முதலீட்டாளர்களுக்கு அட்வைஸ்:
ரீடைல் முதலீட்டாளர்கள், டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு முன், அதன் ஆபத்துகளை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். ஹைய் லெவரேஜ் மற்றும் அதிவேக வர்த்தகங்கள், அனுபவமற்றவர்களுக்கு இதில் பெரும் இழப்பை ஏற்படுத்தலாம்.
எனவே நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய நினைத்தால் நீண்ட கால அடிப்படையில் நிலையாக முதலீடு செய்யவும்.


Click it and Unblock the Notifications