நேற்றைய குளோசிங் பெல் செய்தியிலேயே சர்வதேச அளவில் மேக்ரோ பொருளாதார செய்திகள் அத்தனை நன்றாக இல்லை எனச் சொல்லி இருந்தோம். இன்று ஃபிட்ச் நிறுவனம் இந்தியாவுக்கான தரமதிப்பீட்டை வெளியிட்டு இருக்கிறார்கள். நல்ல வேளையாக இந்தியாவுக்கான தரத்தை ஸ்டேபிள் (BBB) தரத்தில் வைத்திருக்கிறார்கள்.
அதோடு இந்தியாவின் ஜிடிபி மற்ற உலக நாடுகளின் ஜிடிபி வளர்ச்சி உடன் ஒப்பிட்டால் ஓரளவுக்கு நன்றாக இருக்கும் என்றே சொல்லி இருக்கிறார்கள். இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கு, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 4.6 சதவிகிதமாகவும், 2020 - 21 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவிகிதமாகவும் இருக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

அதோடு இந்தியப் பொருளாதாரம் குறித்த செய்திகளும் அத்தனை சிறப்பாக இல்லை. எனவே சந்தை ஃபண்டமெண்டல் செய்திகளை கண்டு கொள்ளாமல் ஏற்றம் கண்டு வருவதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த ஃபண்டமெண்டல் எல்லாம் ஒரு பக்கம் இருக்க... சென்செக்ஸ் இண்டெக்ஸை டெக்னிக்கலாகப் பார்க்கும் போது இன்றைய தேதிக்கு (டிசம்பர் 20, 2019) ஒரு சுமாரான டோஜி பேட்டன் உருவாகி இருக்கிறது. எனவே சென்செக்ஸ், மேற்கொண்டு ஏற்றம் காண்பது கொஞ்சம் சிரமமான விஷயமாகத் தெரிகிறது.
இன்று இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாள். எனவே அடுத்த திங்கட்கிழமைக்குள், ஏதாவது நல்ல செய்தி வந்தால் இந்த வாரம் போல சென்செக்ஸ் ஏற்றம் காணலாம். அப்படி ஒருவேளை சென்செக்ஸ் ஏற்றம் கண்டால் 41,750 புள்ளிகள் முதல் ரெசிஸ்டென்ஸாகவும், 41,950 புள்ளிகளை இரண்டாவது ரெசிஸ்டென்ஸாகவும் வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை இறக்கம் காணத் தொடங்கினால் 41,500-ஐ முதல் சப்போர்ட்டாகவும், 41,150-ஐ இரண்டாவது சப்போர்ட்டாகவும் வைத்துக் கொள்ளலாம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 41,673 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,746 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,681 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இது சென்செக்ஸின் புதிய வரலாற்று உச்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் வெறும் 7 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 12,266 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,271 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 13 பங்குகள் ஏற்றத்திலும், 17 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-ல் 2,684 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,276 பங்குகள் ஏற்றத்திலும், 1,237 பங்குகள் இறக்கத்திலும், 171 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,684 பங்குகளில் 72 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 105 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
நெஸ்ட்லே, டைடன் கம்பெனி, டாடா ஸ்டீல், யெஸ் பேங்க், எஸ்பிஐ போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. வேதாந்தா, கோட்டக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஐடிசி, ஈஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications