இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ-வின் மே மாத விற்பனை தரவுகளை தொடர்ந்து இன்று காலை வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ பங்குகள் 52 வார உயர்வு சாதனையை கடந்து வரலாற்று உச்ச விலையை தொட்டு முதலீட்டாளர்களை மன குளிர வைத்துள்ளது.
இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4669.80 ரூபாய் என்ற வரலாற்று உச்ச அளவீட்டை தொட்டு உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் பஜாஜ் ஆட்டோ பங்குகள் 2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, இதேபோல் 2023 ஆம் ஆண்டில் மட்டும் பஜாஜ் ஆட்டோ பங்குகள் 30.42 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஜனவரி மாதம் பஜாஜ் ஆட்டோ பங்குகளில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று இந்த முதலீடு 1.30 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும். மேலும் 6 மாதத்தில் 25.80 சதவீதமும், ஒரு வருடத்தில் 25.37 சதவீதமும், 5 வருடத்தில் 61.02 சதவீதமும் பஜாஜ் ஆட்டோ பங்குகள் உயர்ந்துள்ளது.
இன்று பஜாஜ் ஆட்டோ பங்குகள் வரலாற்று உச்ச அளவீட்டை தொட முக்கியமான காரணம் அதன் மே மாத விற்பனை தரவுகள் தான். பஜாஜ் ஆட்டோ மே 2022ல் 2.75 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்த நிலையில் மே 2023ல் சுமார் 3.55 லட்ச வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் பஜாஜ் ஆட்டோ கடந்த ஒரு வருடத்தில் 29 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ மே மாதத்தில் இரு சக்கர வாகன பிரிவில் 3.07 லட்சம் வாகனங்களையும், வர்த்தக வாகன பிரிவில் 33,590 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது. வர்த்தக வாகன பிரிவில் பஜாஜ் ஆட்டோ யாரும் எதிர்பார்க்காத வகையில் 107 சதவீத வருடாந்திர விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ பங்குகள் அக்டோபர் 2022 முதல் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உள்ளது. இந்தியாவின் கடுமையான போட்டி மிகுந்த ஆட்டோமொபைல் சந்தையில் வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்கவைத்திருப்பதும், புதிய வாகனங்களை வாங்க செய்வதும் மிகவும் கடுமையான விஷயம். இதில் அசத்தும் பஜாஜ் ஆட்டோ சுமார் 1.31 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீடு உடன் வளர்ச்சி அடைந்து வருகிறது.


Click it and Unblock the Notifications