பங்களாதேஷ் நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைப் போராட்டங்கள் வாயிலாகப் பிரதமர் ஷேக் ஹசினா பதவியிலிருந்து விலகி அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்குத் தஞ்சமடைந்த நிலையில், இந்தியாவின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, பல இந்திய நிறுவனங்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது பங்களாதேஷ் பிரச்சனை. பங்களாதேஷ் நாட்டில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் பல இன்று மும்பை பங்குச் சந்தையில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
பங்களாதேஷ் அரசியல் குழப்பத்தின் காரணமாக அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதால், பங்களாதேஷ்-ல் அதிகம் வர்த்தகம் கொண்ட இந்திய நிறுவனங்களும் சரிவைச் சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக சஃப்ராலா சமையல் எண்ணெய் உற்பத்தியாளரான மாரிகோ நிறுவனத்தின் பங்குகள் சுமார் 4 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. மாரிகோ நிறுவனம் பங்களாதேஷ் நாட்டில் மட்டும் தனது மொத்த வருவாயில் சுமார் 11-12% ஈட்டுகிறது இதனால் இந்த நிறுவனத்தின் விற்பனை பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் மாரிகோ நிறுவனத்தின் பங்குகள் சரிந்தது.

இதேபோல் பங்களாதேஷ் நாட்டில் குறிப்பிட்ட அளவிலான வர்த்தகத்தைக் கொண்ட பெர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ், எமாமி, பேயர் கார்ப், ஜிசிபிஎல், பிரிட்டானியா, விகாஸ் லைஃப்கேர், டாபர், ஏசியன் பெயிண்ட்ஸ், பிடிலைட், ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் இன்று பங்குச்சந்தையில் சரிவை சந்தித்தது.
பெர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ் தனது வருவாயில் சுமார் கால் பகுதியை பங்களாதேஷ் நாட்டில் பெறும் வேளையில், தற்போது கட்டுப்பாட்டுக் காரணமாகத் இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் தற்காலிகமாகச் செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் இதன் பங்குகள் 3% க்கும் அதிகமாக சரிந்தன. இதேபோல் எமாமி பங்குகளும் 4% க்கும் அதிகமாகச் சரிந்தன. ட்ரெண்ட், பிடிஎஸ் மற்றும் விஐபி இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களும் பங்களாதேஷ் நாட்டில் தனது சப்ளை செயினில் முக்கிய பகுதியாக விளங்குகிறது.
இதுகுறித்து பிரபுதாஸ் லிலாதர் நிறுவனத்தின் ஆலோசனைத் தலைவர் விக்ரம் காசத் கூறுகையில் "வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் நிச்சயமாகக் கவலைக்குரியது. அரசாங்கம் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு பிரச்சனைக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம், ஆனால் வங்கதேசத்தில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். விஐபி, எமாமி, மாரிகோ, டாபர், ஏசியன் பெயிண்ட்ஸ், பிடிலைட், டாட்டா மோட்டார்ஸ் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் போன்ற சில குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் இந்நாட்டில் வர்த்தகத்தை வைத்துள்ளது" என்று கூறினார்.
ஜூலை மாதத்தில் துவங்கி வாரக்கணக்காக பங்களாதேஷ் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வன்முறையாக மாறியது. இதற்கிடையில் போலீஸ் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையிலான மோதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா திங்கட்கிழமை பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார். இதைத் தொடர்ந்து பங்களாதேஷ் ராணுவம் நாட்டை கைப்பற்றிய நிலையில், ராணுவத் தலைவர் இடைக்கால அரசு விரைவில் அமைக்கப்படும் என்று கூறினார்.
பங்களாதேஷ் நாட்டில் ஏற்பட்டு உள்ள அரசியல் பிரச்சனையால், இந்தியாவின் நூல் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படலாம். ஏனெனில் பங்களாதேஷ் நாட்டில் உலகின் மொத்த நூல் இறக்குமதியில் 25-30% பங்குடன் மிகப்பெரிய வாடிக்கையாளராக உள்ளது.


Click it and Unblock the Notifications