இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக, பேங்க் நிஃப்டி (Nifty Bank) குறியீடு முதல்முறையாக 62,300 என்ற வரலாற்று சாதனை எல்லையை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் வங்கி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
இந்திய பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாகவே ஏற்றத்துடனே இருக்கிறது. அந்த வகையில் இன்றும் பங்குச்சந்தைகள் ஏற்றமாகவே காணப்பட்டன. இன்று வர்த்தகத்தின் போது பேங்க் நிஃப்டி குறியீடு 645.15 புள்ளிகள் அதாவது 1.04 சதவீதம் உயர்ந்து 62,222.05 என்ற நிலையை எட்டியதுடன், வர்த்தகத்தின் இடையே 62,300 என்ற எல்லையையும் முதல்முறையாக தொட்டது.

இதற்கு முன்பு பிப்ரவரி 3 அன்று எட்டப்பட்ட 61,764 புள்ளிகள் என்ற முந்தைய சாதனையை இந்த புதிய உயர்வு முறியடித்துள்ளது. பேங்க் நிஃப்டி குறியீட்டில் உள்ள மொத்தம் 14 பங்குகளில், 12 பங்குகள் மதிப்பு இன்று வெகுவாக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபம் தந்தன.
குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் இன்றைய சந்தை ஏற்றத்திற்கு தலைமை தாங்கின. கனரா வங்கி ,பஞ்சாப் நேஷனல் வங்கி , பாரத ஸ்டேட் வங்கி ஆகிய முன்னணி பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 5 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வாரி கொடுத்தன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்படுவது இந்தியப் பொருளாதாரத்திற்கும், வங்கித் துறைக்கும் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. சந்தையில் பங்கு வாங்கும் ஆர்வம் நிலையாக தொடர்வது குறியீட்டை ஏற்றமடைய வைத்துள்ளது. குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகமாக பங்களை வாங்க தொடங்கி இருப்பது இதற்கு பெரிய காரணம்.
இதற்கிடையே என்ரிச் மணி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி பொன்முடி மணி கண்ட்ரோல் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இந்த அப் டிரெண்ட் நீடித்தால் பேங்க் நிஃப்டி குறியீடு 63,000 முதல் 64,000 என்ற புள்ளிகளை தொட வாய்ப்புள்ளது என கூறியுள்லார். டந்த பிப்ரவரி 3 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பேங்க் நிஃப்டி கடுமையான சரிவை சந்தித்து கரடி சந்தையில் நுழைந்தது. அப்போது அதன் வரலாற்று உச்சத்திலிருந்து சுமார் 20 சதவீதம் சரிந்து 49,954 என்ற புள்ளிகளுக்கு வீழ்ச்சியடைந்தது. அந்த சரிவிலிருந்து தற்போது சுமார் 25 சதவீதம் வரை மீண்டு வந்துள்ளது.
நவம்பர் மாதத்தில் மட்டும் இந்த குறியீடு சுமார் 14 சதவீதம் ஏற்றம் அடைந்துள்ளது. இதன் மூலம், கடந்த 2021 பிப்ரவரி மாதத்திற்கு பிறகு இந்த மாதம்தான் பேங்க் நிஃப்டியின் மிகச்சிறந்த மாதந்திர செயல்பாடாக இருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

