பெங்களூரை தலைமையிடம், ஓசூரில் பேக்டரி கொண்டு நாடு முழுவதும் இயங்கும் ஏதர் எனர்ஜியின் ஐபிஓ முதல் நாளில் 12% மட்டுமே விண்ணப்பிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி மதிப்பிலான இந்தப் ஐபிஓ-விற்கு மந்தமான தொடக்கத்தைக் பதிவு செய்துள்ளது. ரீடைல் முதலீட்டாளர்கள் 46% விண்ணப்பத்துடன் முன்னிலை வகிக்க, நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் (என்ஐஐ) பிரிவு 14% விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
ஏதர் எனர்ஜி ஐபிஓ-வின் முதலீட்டு விண்டோ ஏப்ரல் 30 வரை திறந்திருக்கும், மேலும் ஏதர் எனர்ஜி பங்குச்சந்தையில் மே 6 அன்று பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏதர் எனர்ஜி இந்த ஐபிஓ, ரூ.2,626 கோடி மதிப்பிலான புதிய பங்கு வெளியீடு மற்றும் ரூ.355 கோடி மதிப்பிலான பங்குகளை ஓஎஃப்எஸ் பிரிவில் விற்பனை செய்து முதலீட்டை திரட்ட உள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.304 முதல் ரூ.321 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சந்தை விலையை ஒப்பிடும் போது தற்போது கிரே மார்கெட் சந்தையில் 1%-க்கும் குறைவாகவே உள்ளது, முதலீட்டாளர்களின் எச்சரிக்கையான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
ஏதர் எனர்ஜியின் ஐபிஓ முதல் நாளில் மந்தமாக தொடங்கினாலும், சந்தை ஆய்வாளர்கள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து நம்பிக்கையுடன் உள்ளனர். எலக்ட்ரிக் வாகன சந்தையில் ஆதர் நிறுவனத்தின் வலுவான நிலை, அதன் உள்நாட்டு தொழில்நுட்ப மேம்பாடு, மற்றும் புதிய தயாரிப்பு வெளியீடுகள் ஆகியவை நீண்டகால முதலீட்டு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை காட்டுகிறது.
ஏதர் எனர்ஜி, இந்தியாவின் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் டாப் 5 இடத்தில் உள்ளது. அதன் உற்பத்தி திறன் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு முயற்சிகள், நீண்ட காலத்தில் கணிசமான வருமானத்தை அளிக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏதர் விற்பனையில் ஓலா-வுக்கு பின்னால் இருந்தாலும், வாகனத்தின் தரத்தில் ஓலா-வை காட்டிலும் சற்று உயர்ந்துள்ளது.
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன், மற்றும் அபு தாபி முதலீட்டு ஆணையம் போன்ற முக்கிய முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1,340 கோடி மதிப்பிலான முதலீட்டை பெற்ற நிறுவனம் தான் இந்த ஏதர் எனர்ஜி.
ஏதர் நிறுவனத்தின் முக்கிய புரமோட்டர்களாக தருண் சஞ்சய் மேத்தா, ஸ்வப்னில் பபன்லால் ஜெயின், மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் ஆகியோர் உள்ளனர். இவர்களின் மொத்த பங்கு இருப்பு, ஐபிஓவுக்கு முன் 52.67 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏதர் எனர்ஜி இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் பணத்தை பல முக்கிய திட்டங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கு. முதலாவதாக, மகாராஷ்டிராவில் ஒரு புது எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தொழிற்சாலையை அமைக்க இந்த பணம் பயன்படுத்தப்டும். இதோடு, நிறுவனத்தோட கடன்களை அடைப்பது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) திட்டங்களுக்கு முதலீடு செய்வது, மார்க்கெட்டிங் செலவுகள் என நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இந்த பணத்தை பயன்படுத்த உள்ளனர்.


Click it and Unblock the Notifications