மும்பை: இந்திய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சில நிறுவனங்கள் தங்களுடைய முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபத்தை தந்து மகிழ்ச்சி அடைய வைக்கின்றன. அப்படி ஒரு நிறுவனம் தான் பாரத் குளோபல் டெவலப்பர்ஸ்.
இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு டிசம்பர் 12ஆம் தேதி 1127 ரூபாய் என இருந்தது, கடந்த மூன்று மாதங்களில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 178 சதவீதம் உயர்ந்துள்ளது கடந்த ஆறு மாத காலத்தில் சுமார் 400 சதவீதம் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் இடம் பெற்றுள்ள தரவுகளின் படி 2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1829 சதவீதமும் கடந்த ஓராண்டு காலத்தில் 2041 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் நிறுவனம் கடந்த புதன்கிழமை அன்று டாடா அக்ரோ மற்றும் கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்திடம் மிகப் பெரிய ஒப்பந்தத்தை கைப்பற்றி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதனை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு புதன்கிழமை அன்று 5% வியாழக்கிழமை அன்று 5% என மொத்தம் இரண்டு நாட்களிலேயே 10% உயர்வு கண்டுள்ளது.
பாரத் குளோபல் நிறுவனத்திடம் இருக்கும் ஆர்டர்களின் மதிப்பு 1500 கோடி ரூபாய் என்ற அளவை எட்டி இருக்கிறது. தற்போது டாடா நிறுவனத்தோடு இந்த நிறுவனம் பெற்றுள்ள ஒப்பந்தத்தின் மதிப்பு 650 கோடி ரூபாய் ஆகும். இதன்படி முதன்மையான வேளாண்மை பொருட்களை பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் நிறுவனம் டாடா அக்ரோ நிறுவனத்திற்கு சப்ளை செய்ய இருக்கிறது.
தேயிலைகள், காபி பீன்ஸ், ஆர்கானிக் பருப்புகள் ,தேங்காய், நிலக்கடலை ,எள்ளு, கடுகு மற்றும் பாதாம், முந்திரி, வால்நட் உள்ளிட்டவற்றை சப்ளை செய்ய இருக்கிறது. இதன் மூலம் 11 முதல் 14 சதவீதம் வரை தங்களுக்கு சேவை கட்டணமாக கிடைக்கும் என பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் நிறுவனம் கூறுகிறது. இந்த 650 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் தங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த மிகவும் மதிப்புமிக்க ஒரு ஒப்பந்தம் என பாரத் டெவலப்பர்ஸ் தெரிவித்துள்ளது.
அண்மையில் தான் இந்த நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மெக்கெயின் இந்தியா அக்ரோ ஆகிய நிறுவனங்களோடு புதிய ஒப்பந்தங்களை பெற்றது இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 10,870 கோடி ரூபாய் ஆகும். இந்நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 43 ரூபாய், 52 வார கால உச்சபட்ச மதிப்பு 1702 ரூபாய் ஆகும்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications