சென்னை: இந்திய பங்குச் சந்தை சரிவில் இருந்தாலும் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் வளர்ச்சி பாதையில் தான் இருக்கின்றன. அந்த வகையில் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் மற்றும் உபகரணங்களை தயாரிக்க கூடிய ஒரு நிறுவனம் கடந்த ஓராண்டு காலத்தில் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை அள்ளி தந்துள்ளது.
பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் (Bharat Global Developers ) நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஓராண்டுக்கு முன்பு வெறும் 20 ரூபாயாக தான் இருந்தது. தற்போது அது 1150 ரூபாய் என்ற அளவில் வளர்ந்து நிற்கிறது.

அதாவது 2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை இந்த 11 மாத காலத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1971 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் 6077 சதவீதம் லாபம் தந்து முதலீட்டாளர்களை திக்கு முக்காட செய்துள்ளது.
தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 11,673 கோடி ரூபாயாக இருக்கிறது. நவம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1210 ரூபாய் என்ற அளவை எட்டியது. இந்த ஒரு நாளில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஓராண்டுக்கு முன்னர் இந்த நிறுவனத்தில் அதாவது 2023 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி இந்த நிறுவனத்தில் 10000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் செய்திருந்தால் அதன் தற்போதைய மதிப்பு 5.87 லட்சம் ரூபாயாக இருந்திருக்கும்.
அது மட்டுமின்றி இந்த நிறுவனம் தங்களுடைய முதலீட்டாளர்களுக்கு 1 : 10 என்ற விகிதத்தில் பங்குகளை பிரிப்பதாகவும் 10:8 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
அதாவது 10 ரூபாய் முக மதிப்பு கொண்ட ஒரு பங்கானது 1 ரூபாய் முக மதிப்பு கொண்ட 10 பங்குகளாக பிரிக்கப்படுகிறது. மேலும் இந்த பங்கு பிரிப்பினை தொடர்ந்து யாரிடம் எல்லாம் 10 பங்குகளுக்கு மேல் இருக்கிறதோ ஒவ்வொரு 10 பங்கிற்கும் 8 பங்குகள் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 26 கோடி ரூபாயாகவும் லாபம் 3 கோடி ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது. இந்த நிறுவன பங்குகளில் 100% சில்லறை முதலீட்டாளர்கள் வசமே இருக்கிறது.


Click it and Unblock the Notifications