சென்னை: இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான பார்தி ஹெக்ஸாகாம், இன்று (ஏப்ரல் 03) முதல் ஏப்ரல் 5 வரையிலான காலகட்டத்தில் தனது பங்குகளை பொது சந்தையில் ஐபிஓ வாயிலாக விற்பனை செய்ய உள்ளது.
இந்த ஐபிஓ மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்ட தயாராகியுள்ளது பார்தி ஹெக்ஸாகாம். இந்நிறுவனத்தின் பங்குகளின் முக மதிப்பு ₹5 ஆக இருக்கும் நிலையில், பங்குகளின் ஐபிஓ விலை வரம்பு ₹542 முதல் ₹570 வரையிலான தொகைக்கு விற்கப்பட உள்ளது.

பார்தி ஹெக்ஸாகாம் ஐபிஓ: இந்த ஐபிஓ மூலம் பார்தி ஹெக்ஸாகாம் சுமார் 4,275.00 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு இருக்கும் வேளையில், ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து (Anchor Investors) 1,924 கோடி ரூபாய் முதலீட்டைச் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) திரட்டப்பட்டது. இது முதலீட்டாளர்களிடையே இந்த ஐபிஓ மீதான ஆர்வத்தை எடுத்துக்காட்டுகிறது.
பங்கு ஒதுக்கீடு மற்றும் குறைந்தபட்ச முதலீடு: பார்தி ஹெக்ஸாகாம் ஐபிஓவில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 26 பங்குகளை வாங்க வேண்டும். அதன் பிறகு, 26 பங்குகளின் மடங்குகளில் (Multiples) பங்குகளை வாங்க முடியும்.
முதலீட்டாளர்களுக்கான பங்கு ஒதுக்கீடு: இந்த ஐபிஓ-வில், பார்தி ஹெக்ஸாகாம் 75,000,000 பங்குகளை விற்பனை செய்ய உள்ள நிலையில் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு 33,750,000 பங்குகளைக் கொடுத்து 1923.75 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டப்பட்டது
இன்று ஐபிஓ விற்பனைக்கு 2,25,00,000 பங்குகள் தகுதிபெற்ற நிறுவன முதலீட்டாளர்களுக்காக (Qualified Institutional Buyers - QIB) ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், 15% வரையிலான பங்குகள் அதாவது 1,12,50,000 பங்குகள் நிறுவனம் அல்லாத நிறுவன முதலீட்டாளர்களுக்காகவும் (Non-Institutional Investors - NII), 10% வரையிலான பங்குகள் (75,00,000 பங்குகள்) ரீடைல் முதலீட்டாளர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய நிதியாண்டின் முக்கிய ஐபிஓ: 2024-25 நிதியாண்டின் (FY25) தொடக்கத்தில் முதன்மைச் சந்தையில் (Primary Market) பார்தி ஹெக்ஸாகாம் போன்ற பிரபலமான நிறுவனம் ஐபிஓ மூலம் நிதி திரட்டப்பட உள்ளது. இது நிச்சயம் இந்த நிதியாண்டின் முதலீட்டு சந்தையில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய நிகழ்வாக இருப்பது மட்டும் அல்லாமல் ஐபிஓ சந்தைக்குச் சிறப்பான துவக்கமாக இருக்கும்.
அட்வைஸ்: பார்தி ஹெக்ஸாகாம் ஐபிஓவில் முதலீடு செய்வதற்கு முன்பு, முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் நிதி நிலை, எதிர்கால திட்டங்கள் மற்றும் சந்தை நிலவரங்களைக் கவனமாக ஆராய்ச்சி செய்து முடிவெடுப்பது அவசியம்.
பங்கு இருப்பு: பாரதி ஹெக்ஸாகாம் நிறுவனத்தில் சுனில் மிட்டல் தலைமையிலான பாரதி ஏர்டெல் நிறுவனம் 70% பங்குகள் அதாவது 35 கோடி பங்குகள் வைத்திருக்கிறது. மீதமுள்ள 30% பங்குகளை அதாவது 15 கோடி பங்குகள் மத்திய அரசு நிறுவனமான TCIL வைத்திருக்கிறது என்று வரைவு சிவப்பு ஹெர்ரிங் விளக்கக் குறிப்பு (DRHP) தெரிவிக்கிறது.
மத்திய அரசு திட்டம்: தற்போது, இந்த பொது துறை நிறுவனமான தேசிய தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனம் (TCIL), பார்தி ஹெக்ஸாகாமில் 7.5 கோடி பங்குகளை ஐபிஓ வெளியீட்டின் மூலம் விற்பனை செய்ய உள்ளது.
பாரதி ஹெக்ஸாகாம் வர்த்தகம்: பாரதி ஹெக்ஸாகாம் என்பது ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஏர்டெல் பிராண்ட் பெயரில் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் சேவைகள், லேண்ட் லைன் சேவைகள் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் நிறுவனம் தான் இது.


Click it and Unblock the Notifications