அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த திங்கட்கிழமை பதவியேற்றார். பதவியேற்ற முதல் நாளிலேயே தனது உரையின் மூலம் உலகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பி விட்டார். இறக்குமதிக்கு கூடுதல் வரி, பனாமா கால்வாய் மீட்பு, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றம் என தனது உரையின் மூலம் உலகம் முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
குறிப்பாக, வெளிநாடுகள் வரி விதித்தால், நாங்களும் அவர்களுக்கு வரி விதிக்கிறோம் என்று அவர் பேசியிருப்பது, டாலர் பயன்பாட்டை குறைக்கும் பாதையில் செல்லும் எந்தவொரு நாடாக இருந்தாலும் வர்த்தக போரை தொடங்க அமெரிக்கா தயார் என்பதை தயக்கம் இன்றி வெளிப்படுத்தியுள்ளார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நல்ல கூட்டாளியாக நாம் இருந்தாலும், டிரம்பின் முதல் பதவி காலத்தில் நமக்கு பல படிப்பனைகள் கிடைத்தது. தற்போது வரி விதித்தால் நாங்களும் வரி விதிப்போம் என்று இந்தியாவுக்கும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்பின் வரிகள் மிரட்டல்கள் ஒருபுறம் எழுந்தாலும், எந்தவொரு எதிர்கால வர்த்தக சவால்களையும் எதிர்கொள்ள எதிர்வரும் பட்ஜெட் ஒரு முக்கிய பங்கினை கொண்டிருக்கலாம்.
அமெரிக்கா உள்பட சர்வதேச கூட்டாளிகளுடான நமது வர்த்தக ஒப்பந்தங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யலாம். எதிர்வரும் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கினால், அது ஆத்மநிர்பர் பாரத்-ல் அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க உதவும்.
அமெரிக்கா மற்றும் சீனாவை தவிர்த்து மற்ற கூட்டணி நாடுகளுகான இந்தியாவின் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை வலுப்படுத்துவது நமது வர்த்தக எல்லையை விரிவுப்படுத்த உதவும். இஒய் இந்தியாவின் சப்ரா கூறுகையில், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் குறிக்கோள்களுடன் வர்த்தக கொள்கைகள் சீரமைக்கப்படுவதை உறுதி செய்ய, ஆசியான் போன்ற பிராந்தியங்களுடன் தற்போதுள்ள தாராள வர்த்தக ஒப்பந்தங்களை மத்திய அரசு மறுஆய்வு செய்யக்கூடும்.
இந்த தாராள வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் சலுகை வரி இறக்குமதிகளை பகுத்தறிவு செய்வது மலிவான இறக்குமதிகளின் வருகையை குறைக்கவும், உள்நாட்டு தொழில்களை ஆதரிக்கவும் உதவும் என்று தெரிவித்தார்.
பிரிவினை நோக்கி செல்லும் உலகில், சாதகமான பட்ஜெட் கொள்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒத்த எண்ணம் கொண்ட வெளிநாட்டு கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுவது இந்தியாவுக்கு உதவும். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, சுங்க வரிகளை எளிமைப்படுத்துவது மற்றும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைகளை விரிவுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வர்த்தக ஒப்பந்தங்களை வலுப்படுத்துவது மற்றும் ஏற்றுமதி இலக்குகளை பல்வகைப்படுத்துவது ஆகியவை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் நம் நாட்டை ஒரு சாத்தியமான மாற்றாக நிலைநிறுத்த முடியும். வெளிநாட்டு வர்த்தக கவலைகளை சரி செய்வதற்கான ஒரு மூலோபாய வாய்ப்பை எதிர்வரும் மத்திய பட்ஜெட் நாட்டுக்கு வழங்குகிறது என நிபுணர்கள் தெரிவித்தனர்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications