பங்கு சந்தை, பங்கு வர்த்தகம் என்றாலே ஒரு நிறுவன பங்கினை வாங்குவது விற்பனை செய்வது என்பது தான் நமக்கு இருக்கும் புரிதல். ஆனால் இந்த பங்கு சந்தையில் தங்கம், வெள்ளி, சர்க்கரை , இரும்பு என பல பொருட்களை வைத்தும் வர்த்தகம் நடக்கிறது. இதனை சரியாக கணித்து முதலீடு செய்பவர்கள் லாபம் பார்க்கிறார்கள். இந்நிலையில் மழை அளவை அடிப்படையாக கொண்டு பங்கு வர்த்தகம் செய்யும் முறையை இந்திய பங்குச்சந்தை அறிமுகம் செய்துள்ளது.
National Commodity and Derivative Exchange (NCDEX) அமைப்பு மும்பை மழை பொழிவை அடிப்படையாக கொண்டு, நாட்டின் முதல் 'வானிலை டெரிவேட்டிவ்' (weather derivative contract) வர்த்தகத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுளது. இதற்கு RAINMUMBAI என பெயரிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் வர்த்தகர்கள் இந்த வானிலை அடிப்படையிலான மற்றும் மழை அடிப்படையிலான வர்த்தக ஒப்பந்தங்களில் முதலீடு செய்யலாம்.

முதலில் மும்பை மழையை அடிப்படியாக கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களும் அதனை தொடர்ந்து, இந்தியாவின் கிழக்கு பகுதி பருவமழை மற்றும் வெப்பநிலை மாறுபாடுகளை அடிப்படையாக கொண்ட புதிய வர்த்தக ஒப்பந்தங்களையும் அறிமுகப்படுத்த NCDEX முடிவு செய்துள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் இடர்பாடுகளை கையாளுவதற்காக, வெப்பநிலை சார்ந்த டெரிவேட்டிவ்கள் விவசாய துறைக்கு பெரிதும் உதவும் என அந்த அமைப்பு கூறுகிறது.
மழை அளவை கணித்து அதற்கு ஏற்ப இதில் முதலீடு செய்யலாம், நிறுவனங்களுக்காக தொடங்கப்பட்ட ஒரு வர்த்தகமாக இருந்தாலும் சில்லறை முதலீட்டாளர்களும் இதில் முதலீடு செய்யலாம். அதாவது அதிக மழை பெய்யும் என்பதற்கான சில வர்த்தக ஒப்பந்தங்களும், குறைந்த மழையே பெய்யும் என்பதற்கான வர்த்தக ஒப்பந்தங்களும் பங்குச்சந்தையில் ரெயின் மும்பையில் காட்டும். இதில் நீங்கள் எதை கணிக்கிறீர்களோ அதில் முதலீடு செய்யலாம். நீங்கள் கணித்தது நிறைவேறினால் லாபம்.
மும்பை ஐஐடி மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு கடந்த 30 ஆண்டுகால இந்திய மழைப்பொழிவு விவரம் மற்றும் வானிலை நிலவரங்களைக் கொண்டு இந்த டெரிவேட்டிவ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. RAINMUMBAI டெரிவேட்டிவ்கள் என்பது Cash setteled futures contract ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வர்த்தகத்திற்கு 50 லாட்டுகள் குறைந்தபட்சம் வாங்க வேண்டி இருக்கும். மே 29ஆம் தேதியிலிருந்து இதில் வர்த்தகம் செய்யலாம் என்றும் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் இதில் ஒரு யூனிட் என்பது ஒரு மில்லி மீட்டர் மழை பொழிவு என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்-இல் காலை 10 மணியிலிருந்து இரவு 11:30 மணி வரை இந்த ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தத்தை வாங்கலாம் மற்றும் விற்பனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாதத்தின் கடைசி அலுவல் நாள் ரெயின் மும்பை ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தின் எக்ஸ்பையரி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை பருவமழை காலம் இருக்கும் எனவே இந்த மழைப்பொழிவை அடிப்படையாகக் கொண்டு இந்த டெரிவேட்டிவ் வர்த்தகம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும் விவசாய துறை மட்டுமல்லாமல், நீர்மின் உற்பத்தி நிறுவனங்கள், 'எப்.எம்.சி.ஜி.,' நிறுவனங்கள், போக்குவரத்து துறை மற்றும் வங்கிகள் கூட இந்த வானிலை வர்த்தகத்தை பயன்படுத்தி, தங்களின் வணிக ரிஸ்க்கை குறைக்க முடியும். குறிப்பாக, பருவமழை பொய்த்தால், வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கும் என்பதால், வங்கிகளுக்கும் இது ஒரு சிறந்த பாதுகாப்பு வளையமாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications

