இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தில் தன்னிடம் உள்ள பங்குகளில் இருந்து 6.5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் காப்பீடு என்றாலே அனைவரின் நினைவுக்கும் வரும் பெயர் எல்ஐசி தான்.
எல்ஐசி நிறுவனம் முழுக்க முழுக்க அரசு பொதுத்துறை நிறுவனமாக இருந்தது. அரசுக்கு லாபத்தை அள்ளி தந்த நிறுவனங்களில் எல்ஐசி முதன்மையானது.கடந்த 2022ஆம் ஆண்டு தான் ஐபிஓ வெளியிட்டு இதில் இருந்து குறிப்பிட்ட பங்குகளை அரசு விற்பனை செய்தது. இந்நிலையில் மீண்டும் குறிப்பிட்ட அளவிலான பங்குகளை ஆஃபர் ஃபார் சேல் (Offer for Sale) முறையில் விற்பதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த பங்கு விற்பனையானது இரண்டு நாட்கள் நடைபெறும். நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் பெரு முதலீட்டாளர்கள் இன்றும் , சில்லறை முதலீட்டாளர்கள் நாளையும் பங்குகளை வாங்க விண்ணப்பம் செய்யலாம். இந்த விவரங்களை முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறையின் செயலாளர் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
எல்ஐசி பங்கின் குறைந்தபட்ச அடிப்படை விலை ஒரு பங்குக்கு 382 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று பங்குச்சந்தையில் எல் ஐசி பங்கின் விலை 424 ரூபாயாக இருந்தது. அதனை விட சுமார் 10% தள்ளுபடி விலையில் அரசு இந்த பங்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தில் முதலில் 2.5% பங்குகளையும், அதனுடன் கூடுதலாக 4% பங்குகளையும் 'கிரீன் ஷூ ஆப்ஷன்' மூலமாக சேர்த்து மொத்தம் 6.5% பங்குகளை விற்கிறது. நிர்ணயம் செய்யப்பட்ட அடிப்படை விலையான 382 ரூபாயின் படி கணக்கிட்டால், இந்த பங்கு விற்பனை மூலம் அரசுக்கு சுமார் 31,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் விதிமுறைகளின்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பொது பங்கு பங்களிப்பை குறைந்தபட்சம் 10% ஆக உயர்த்த வேண்டும். இதற்கு மே 16, 2027 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி எல்ஐசியில் மத்திய அரசு 96.5% பங்குகளை வைத்திருக்கிறது. இந்த தற்போதைய பங்கு விற்பனை மூலம் அரசு அந்த இலக்கை உரிய காலக்கெடுவுக்கு முன்பே எட்ட முடியும்.
2022ஆம் ஆண்டு மே மாதம் எல்ஐசி நிறுவனம் ஐபிஓ வெளியிட்டது. அப்போது ஒரு பங்கு 902 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. முதலில் 3.5% பங்குகளை அரசு விற்று சுமார் 21,000 கோடியை திரட்டியது. தற்போது எல்ஐசியின் சந்தை மதிப்பு 5.36 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.
எல்ஐசி நிறுவனம் இந்தியாவில் அதிக லாபம் பார்க்கும் ஒரு அரசு நிறுவனம் ஆகும். கடந்த ஆண்டில் மட்டும் இந்நிறுவனம் சுமார் 55,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. அதே வேளையில் 1.11% வரை ஈவுத்தொகையும் முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனம் வழங்கி வருகிறது.உங்களிடம் டீமேட் கணக்கு இருக்கிறது என்றால் நாளைய தினம் எல்ஐசி பங்குகளை வாங்க நீங்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன் பின்னர் உங்களுக்கு பங்கு ஒதுக்கப்பட்டால் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

