MRF என்றாலே நம் நினைவுக்கு வருவது இந்நிறுவனத்தின் லோகோ-வும் சச்சின் டெண்டுல்கர் பேட் தான். ஆனால் இன்று இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
திங்கட்கிழமை மே 8 ஆம் தேதி முதல் முறையாக இந்தியாவின் முன்னணி மற்றும் பிரபலமான டயர் தயாரிப்பு நிறுவனமான எம்ஆர்எஃப் பங்குகள் பியூச்சர்ஸ் சந்தையில் ஒரு பங்கு விலை 1,00,000 ரூபாய் அளவை எட்டி புதிய சாதனை படைத்தது, MRF நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைத் தொட்டது.

இந்த மாபெரும் சாதனையின் மூலம், மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி (எம்ஆர்எஃப்) பங்கு மதிப்பு முதல் முறையாக 6 இலக்க எண்ணிக்கையைத் தொட்டது. இந்த 1 லட்சம் ரூபாய் பங்கு விலை என்பது பியூச்சர் சந்தையில் வர்த்தகத்தில் பதிவான அளவு தான், பணச் சந்தையில் MRF பங்கு விலை இன்னும் 1 லட்சத்தைத் தொடவில்லை, இதனால் முதலீட்டாளர்கள் குழப்பமடையக் கூடாது.
செவ்வாய்க்கிழமை மும்பை பங்குச்சந்தையில் MRF பங்குகள் 0.28 சதவீதம் வளர்ச்சி அடைந்து ஒரு பங்கு விலை 98.027.70 ரூபாயக்கு வரத்தகம் செய்யப்பட்டு வருகிறது. இன்றைய வரத்தகத்தில் MRF பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 99100 ரூபாய் வரையில் உயர்ந்தது.
MRF பங்குகளின் 52 வார உயர்வு 99,879.65 ரூபாயாக உள்ளது. 2023 ஆம் ஆண்டில் MRF பங்குகள் 11.29 சதவீதம் வளர்ச்சி அடைந்து அசத்தியுள்ளது, குறிப்பாக அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிகப்படியான முதலீட்டை இந்திய சந்தையில் முதலீடு செய்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்திய பங்குச்சந்தையில் MRF பங்குகள் தான் இப்போது மிகவும் விலையுயர்ந்த பங்குகளாக உள்ளது. MRF நிறுவனத்தை தொடர்ந்து பேஜ் இண்டஸ்ட்ரீஸ், ஹனிவெல் ஆட்டோமேஷன், ஸ்ரீ சிமெண்ட், 3எம், ABBOT, நெஸ்லே போன்றவை விலையுயர்ந்த பங்குகள் பட்டியலில் உள்ளது. MRF பங்குகளின் 1 லட்சம் ரூபாய் அளவீட்டை தொட்ட நிலையில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 41,540 கோடி ரூபாயாக உள்ளது.
மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்பது தான் MRF என்பதன் விரிவாக்கம், MRF நிறுவனத்தை MRF டயர்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவை குறிப்பாக சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு டயர் உற்பத்தி நிறுவனமாகும். இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் மிகப்பெரிய டயர் உற்பத்தி நிறுவனமாகவும் உள்ளது.
MRF நிறுவனம் டயர்கள், டிரெட்ஸ், டியூப்கள் மற்றும் கன்வேயர் பெல்ட்கள், பெயிண்ட் மற்றும் பொம்மை உள்ளிட்ட பல ரப்பர் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்கிறது. MRF லிமிடெட் AAA- பிராண்ட் தரத்துடன் உலகின் இரண்டாவது வலிமையான டயர் தயாரிப்பாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications