இந்திய ஐடி சேவை துறையில் வேகமாக வளரும் ஒரு மிட்சைஸ் நிறுவனமாக திகழும் Coforge நிறுவன பங்கு விலை புதன்கிழமை வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக சுமார் 9 சதவீத் வரையில் சரிந்து ஒரு பங்கு விலை 1,780 ரூபாய் என்ற குறைந்தபட்ச விலையை எட்டியது.
இன்றைய பெரும் சரிவுக்கு மிக முக்கியமான காரணம் இந்நிறுவனத்தின் தனிப்பட்ட தலைவராகவும், சேர்பர்சனாகவும் இருக்கும் ஓம் பிரகாஷ் பட், செப்டம்பர் 8ஆம் தேதி முதல் உடனடியாக தனது பதவியில் இருந்து விலகியதே இதற்கு காரணமாக அமைந்தது. சமீபத்தில் ஹெச்டிஎப்சி வங்கியில் மூத்த தலைவர் நிர்வாக குழு பதவியில் இருந்து வெளியேறியது நினைவிருக்கும்,கிட்டத்தட்ட இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

2026ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டுக்கான உள்நிர்வாக தணிக்கை பணியில், நிர்வாக ஆய்வு அறிக்கை தயாரிப்பு மற்றும் அதை நிர்வாக குழுவிடம் சமர்ப்பித்த விதத்தில் சில முக்கிய தகவல்கள் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தன.
இதுகுறித்து ஓம் பிரகாஷ் பட் விளக்கம் அளித்த நிலையில், நிர்வாக குழு இறுதி முடிவு எடுக்கும் முன்பே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நிர்வாக ஆய்வு தொடர்பான கருத்து வேறுபாடு நீடிப்பது நிர்வாக குழுவின் செயல்பாட்டுக்கு ஏற்றதாக இருக்காது என்பதால் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
2020ல் பட்டியலிடப்பட்ட கோஃபோர்ஜ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 6 மாதத்தில் 60 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்.. மார்ச் மாதம் 52 வார குறைவான பங்கு விலையை தொட்ட கோஃபோர்ஜ் கடந்த வாரம் 52 வார உயர்வை தொட்டது.
ஆனாலும் இன்று ஓம் பிரகாஷ் பட் வெளியேற்றத்தை தொடர்ந்து Coforge நிறுவன பங்கு விலை 9 சதவீதம் வரையில் சரிந்து தற்போது 4.54 சதவீத சரிவில் 1,861.20 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
சமீபத்தில் கோஃபோர்ஜ் அமெரிக்காவைச் சேர்ந்த என்ஜினியரிங் சேவை நிறுவனமான என்கோரா என்னும் நிறுவனத்தை 2.35 பில்லியன் டாலர் மதிப்பில் மொத்தமாக கைப்பற்றியது. இந்த நிறுவனத்தின் மூலம் கோஃபோர்ஜ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சேவைகள் பெரிய அளவில் வலுப்பெற்றது. இதனாலேயே ஏஐ ஆதிக்கத்தால் இந்தியாவில் பெரும்பாலான ஐடி சேவை நிறுவன பங்குகள் சரிந்த போது கோஃபோர்ஜ் தொடர்ந்து உயர்ந்து வந்தது.
2026ல் அதாவது ஜனவரி 1 முதல் இன்று வரையில்.. கோஃபோர்ஜ் பங்குகள் 12.04 சதவீதம் உயர்ந்தது, இதேபோல் மற்ற நிறுவனங்களை பார்க்கும் போது.. டிசிஎஸ் 31.46 சதவீதம் சரிந்துள்ளது, இன்போசிஸ் 36.50 சதவீதம் சரிந்துள்ளது, ஹெச்சிஎல் டெக் 24.75 சதவீதம் சரிந்துள்ளது, டெக் மஹிந்திரா 6.54 சதவீதம் சரிந்துள்ளது, விப்ரோ 37.31 சதவீதம் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications


