இந்தியாவின் ஜவுளி தலைநகரம், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம், உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் திருப்பூரின் பெருமை, இன்று ஒரு நூலிழையில் சவாலை சந்தித்து கொண்டிருக்கிறது எனலாம்.
அமெரிக்கா எடுத்துள்ள அந்த ஒரு அதிரடி முடிவு, ஒட்டுமொத்த தெற்காசிய வர்த்தக வரைபடத்தையே மாற்றி வரைந்திருக்கிறது. வங்கதேசத்திற்கு இனி சுங்க வரி கிடையாது என அமெரிக்கா பச்சைக்கொடி காட்டி இருக்கும் அதே வேளையில், இந்திய ஏற்றுமதியாளர்கள் 18% வரிச் சுமையோடு மல்லுக்கட்ட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழலில் இந்திய ஜவுளி நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்திக்க ஆரம்பித்துள்ளன. இந்த சரிவானது இப்படியே தொடருமா அல்லது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்து விடுமா என பல கேள்விகளை முதலீட்டாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

அமெரிக்காவின் இந்த மாஸ்டர் பிளான் திருப்பூரின் தையல் இயந்திரங்களை மௌனிக்க செய்யுமா? அல்லது இந்த சவாலை உடைத்தெறிந்து இந்தியா மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
வீழ்ச்சி கண்ட இந்திய ஜவுளி நிறுவன பங்குகள்!
அமெரிக்கா - வங்கதேசம் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ஜவுளித் துறை சார்ந்த பங்குகள் இன்று கடும் சரிவை கண்டுள்ளன. முன்னதாக, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக கூட்டமைப்பு குறித்த எதிர்பார்ப்புகளால், கடந்த சில நாட்களாக ஜவுளி துறை பங்குகள் உயர்ந்திருந்தன. ஆனால் வங்கதேசத்திற்கு சாதகமான புதிய அறிவிப்பு வந்தவுடன், அந்த நிலை அப்படியே தலைகீழாக மாறியது. இந்த சூழலில் தான் கோகுல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ் (Gokaldas Exports), கே.பி.ஆர் மில் (KPR Mill), அரவிந்த் (Arvind) மற்றும் பேர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ் (Pearl Global Industries) போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாளில் 5% மேலாக சரிவை கண்டுள்ளன.
முதலீட்டாளர்கள் கவலை என்ன?
இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க சந்தையில் தங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த புதிய ஆர்டர்கள் குறையலாம் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர். ஏனெனில் முன்பு வங்கதேச பொருட்களுக்கு 37% வரை வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஆனால் 9 மாதங்களாக நடந்த பேச்சு வார்த்தையின் பயனாக, தற்போது வரி குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான புதிய ஒப்பந்தத்தின் படி, வங்கதேசத்திலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான பொதுவான வரி 19% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி விகிதமானது இந்தியாவின் ஜவுளி பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி 18% வரியுடன் ஒப்பிடும்போது சற்று அதிகம் தான். ஆனால் இதில் தான் ஒரு ட்விஸ்ட் ஒளிந்துள்ளது. வங்கதேசம் பொதுவாக 19% வரி விகிதத்தை பெற்றிருந்தாலும், ஜவுளி துறைக்கான ஜீரோ வரி சலுகை, இந்தியாவிற்கு கவலையளிக்கும் ஒரு முக்கிய அம்சமாகும். வங்கதேசத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் மற்றும் ஜவுளி பொருட்களுக்கு அமெரிக்கா 0% வரி (Zero Tariff) சலுகையை வழங்கியுள்ளது. இருப்பினும் இதற்கு ஒரு முக்கிய நிபந்தனையும் விதித்துள்ளது. அது வங்கதேசத்தில் ஆடைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பருத்தி அல்லது செயற்கை இழைகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
இந்தியாவுக்கு பிரச்சனை ஏன்?
இந்திய ஆடைகளுக்கு 18% வரி இருக்கும் போது, அமெரிக்க பருத்தியை பயன்படுத்தும் வங்கதேச ஆடைகளுக்கு 0% வரி இருக்கும். இதனால் அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்களை விட வங்கதேச பொருட்கள் விலை குறைவாக இருக்கும். மேலும் வங்கதேசம் இதுவரை இந்தியாவிடமிருந்து தான் அதிக பருத்தியை இறக்குமதி செய்து வந்தது. இப்போது 0% வரி சலுகைக்காக அவர்கள் இந்திய பருத்தியை கைவிட்டு, அமெரிக்க பருத்தியை வாங்கத் தொடங்கலாம். இது இந்திய பருத்தி விவசாயிகளையும், நூல் ஆலைகளையும் பாதிக்கலாம்.
ஒரே கல்லில் இரு மாங்காய்!
அமெரிக்காவின் இந்த சலுகைக்கு பதிலாக, வங்கதேசம் தனது சந்தையை அமெரிக்காவிற்கு திறந்து விட்டுள்ளது. அமெரிக்காவை பொறுத்த வரையில் ஒரே கல்லில் இரு மாங்காய் என்பது போல், இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா தனது நாட்டு விவசாய பொருட்களுக்கு வங்கதேசத்தில் மிகப்பெரிய சந்தையை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் சோயா பீன்ஸ், கோதுமை, பால் பொருட்கள், மாட்டிறைச்சி மற்றும் பழங்களை வங்கதேசம் முன்னுரிமை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டும். அதோடு அமெரிக்க நிறுவனங்களின் கார்கள், விமானங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு வங்கதேசம் தனது சந்தையை திறந்து விடவும் ஒப்புக்கொண்டுள்ளது. ஒரு புறம் தனது பொருட்களை எளிதாக வங்க தேசத்தில் சந்தைப்படுத்த முடியும், மறுபுறம் குறைந்த விலையில் ஜவுளி பொருட்களையும் வாங்கிக் கொள்ள முடியும். அதற்கு தேவையான மூலதனத்தையும் அமெரிக்காவே கொடுக்கும். இது இரு நாட்டின் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும் என்றாலும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு பெரும் சவாலான ஒன்றும் கூட.
இந்தியாவிற்கு ஏன் இது சவால்?
இந்தியாவுக்கான ஜவுளி வரி 18% ஆக உள்ளது. ஆனால் வங்கதேசத்திற்கு 0%. இதனால் உலக சந்தையில் இந்திய ஆடைகளை விட வங்கதேச ஆடைகளின் விலை கணிசமாக குறையும். இது அமெரிக்காவில் மட்டுமல்ல, மற்ற நாடுகளையும் ஈர்க்க உதவிகரமாக இருக்கும். இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வர்த்தக வாய்ப்புகளை பாதிக்கும் என்பதே சந்தையின் தற்போதைய கவலையாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் ஜவுளித் துறை சார்ந்த பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இந்த பிரச்சனையை சமாளிக்க ஒன்று இந்திய அரசு அமெரிக்காவுடன் வங்கதேசம் போல, இணைந்து போக வேண்டும். இல்லையேல் மாற்று சந்தைகளை நாட வேண்டியிருக்கும். அப்படியே நாடினாலும் வங்கதேசத்திற்கு இணையாக விலையை குறைத்துக் கொடுக்க வேண்டியிருக்கும். இது இந்திய நிறுவனங்களின் மார்ஜின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு இந்திய நிறுவனங்களுக்கு அழுத்தத்தையே கொடுக்கும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications