சென்னை: இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கடந்த சில வருடங்களாகவே அதிகப்படியான லாபத்தைப் பெற்று வருகின்றனர், குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் பங்குச்சந்தைக்குப் புதிதாக வந்த முதலீட்டாளர்கள் புதிய வர்த்தக தறையில் அதிகம் முதலீடு செய்து சிறப்பான லாபத்தைப் பெற்று வருகின்றனர். இது பங்குச்சந்தையில் ஒருபக்கம், மறுமுனையில் அதிகப்படியான முதலீட்டாளர்கள் F&O துறையில் முதலீடு செய்து பெரும்பாலானோர் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். இதனாலேயே பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமாகச் செபி F&O துறையில் அதிகப்படியான முதலீட்டைச் செய்வதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் செபி தலைவர் மாதபி புரி புச் முக்கியமான விஷயத்தை இந்திய மக்களுக்கும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இந்திய பங்குச்சந்தையில் டெரிவேடிவ்ஸ் வர்த்தகத்தில் இந்தியக் குடும்பங்கள் தங்கள் சேமிப்பில் ஆண்டுக்கு சுமார் ரூ.60,000 கோடி இழந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஆண்டுக்கு ரூ.50,000 முதல் 60,000 கோடி வரை இந்தியக் குடும்பங்கள் தங்கள் சேமிப்பிலிருந்து பங்குச்சந்தை டெரிவேட்டிவ் வர்த்தகத்தின் மூலம் நஷ்டமாகி வருகிறது. இந்த தொகை நேரடி பங்கு முதலீடுகள், ஐபிஓ, மியூச்சுவல் பண்ட், போன்ற பயனுள்ள பிரிவில் முதலீடு செய்தால் பெரிய அளவிலான சொலவத்தைச் சேர்க்க முடியும். இது ஒரு பெரிய பொருளாதார பிரச்சினை அல்லவா? ரூ.50,000 முதல் 60,000 கோடி என்பது சிறிய தொகையல்ல" என்று கூறினார்.
சில வருடங்களுக்கு முன்பு F&O துறையில் முதலீடு செய்யப்படும் தொகை சிறிய அளவில் இருந்ததால், இதில் செபி தலையிடத் தேவையில்லை என்று கருதினோம், ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் வர்த்தக அளவு கணிக்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் செபி தலைவர் மாதபி புரி புச் தெரிவித்தார். இதனால் விரைவில் கடுமையான கட்டுப்பாட்டை டெரிவேட்டிவ் வர்த்தகத்தில் கொண்டு வரச் செபி திட்டமிட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக F&O வர்த்தக துறையில் இருக்கும் பிரச்சினை குறித்து தனி அறிக்கையை வெளியிட உள்ளதாகவும் செபி தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து டெரிவேட்டிவ் துறை மீதான வர்த்தகம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது முதலீடுகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளனர். செபியின் இந்த நடவடிக்கை பங்குச்சந்தை நிலைத்தன்மைக்கு உதவும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications