சென்னை: வெளிநாட்டு முதலீட்டு நிதி நிறுவனங்கள் (FPIs) 2024-ம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தையில் செய்துள்ள முதலீட்டில் பெரும் மாற்றத்தை செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டு துவக்கத்தில் வலுவான முதலீட்டை செய்த வெளிநாட்டு முதலீட்டு நிதி நிறுவனங்கள் வருடத்தின் இறுதியில் இந்திய பங்குகளில் அதிகம் விற்பனை செய்ய முதலீட்டாளராக மாறியது.
கடந்த 10 வருடத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிதி நிறுவனங்கள் அதிகப்படியான விற்பனை செய்த அளவீட்டில் இரண்டாவது இடம் 2024 ஆம் ஆண்டுக்கு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக ரூ.1,20,598.42 கோடி முதலீட்டை பங்கு விற்பனை மூலம் வெளியேறியுள்ளனர்.

இந்த மோசமான நிலைக்கு முதலும் முக்கியமான காரணம் சீனா. 2024 ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து அதிக வளர்ச்சி வாய்ப்புகளை கொண்டிருக்கும் சந்தையாக இந்தியா திகழந்த நிலையில் அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரையில் அனைத்து FPI முதலீட்டாளர்களும் இந்திய பங்குச்சந்தையை தேடி தேடி முதலீடு செய்தனர்.
ஆனால் 4 மாதத்திற்கு முன்பு சீன அரசு அந்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஊக்க திட்டத்தை அறிவித்தது. இந்த ஒரு திட்டம் முதலீட்டாளர்களின் கவனத்தை திசை திருப்பியது.
இதேவேளையில் அமெரிக்க அதிபர் தேர்தலும், அதிகரித்து வரும் அமெரிக்க அரசு பத்திர வருமானங்கள், இந்தியாவின் பலவீனமான இரண்டாம் காலாண்டு லாபங்கள் போன்ற காரணிகள் இந்திய பங்குச்சந்தையின் முதலீட்டு கவர்ச்சியை இழந்து பிளாப் படமாக மாற துவங்கியது. இதனால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதாக கருத முடியாது, பங்குச்சந்தையை பொருத்த வரையில் இந்திய சந்தையை காட்டிலும் சீன சந்தையில் அதிக லாபம் கிடைக்கிறது, அவ்வளவு தான் கதை.
2024-ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் FPI முதலீட்டைளர்கள் அதிகப்படியான முதலீட்டை செய்திருந்தது. ஆனால் அக்டோபர் மாதம் முதல் தொடங்கிய விற்பனை பங்குச்சந்தையை மேசமான நிலைக்கு தள்ளியது.
FPI முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை தீவிரமடைந்த நிலையில் செப்டம்பர் 27 ஆம் தேதி முதல், நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறிப்பிடத்தக்க அளவிலான சரிவை சந்தித்தன. இதனால் நிஃப்டி 10% மற்றும் சென்செக்ஸ் 8.7% வீழ்ச்சியடைந்தன. இதேவேளையில் வங்கி நிஃப்டி 4.69% வீழ்ச்சியடைந்தது, அதே நேரத்தில் நிஃப்டி ஐடி குறியீடு 3.33% லாபத்துடன் இருக்கிறது.


Click it and Unblock the Notifications