இந்திய பங்குச்சந்தைகள் கடந்த ஓராண்டு காலமாகவே ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. இது முதலீட்டாளர்களை குழப்பமடைய செய்ய வைத்துள்ளது. இந்நிலையில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை ஆய்வாளர் சுனில் கௌல் மணி கண்ட்ரோலுக்கு அளித்துள்ள பேட்டியில் அடுத்த 12 மாதங்களில் நிஃப்டி குறியீடு 27,000 புள்ளிகளை எட்டும் என்று கணித்துள்ளார். இந்தியப் பங்குச் சந்தைகள், குறிப்பாக நிஃப்டி, இன்னும் கூட உயர வாய்ப்புள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய பங்குச்சந்தைகள் உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நிஃப்டிக்கு 12 மாத கால அளவில் 27,000 என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம் என கௌல் கூறியுள்ளார். நிஃப்டி 50 இந்த இலக்கை தீபாவளிக்குள் அல்லது இந்த ஆண்டின் இறுதியில் எட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பொருளாதாரம் மந்தமடைந்துள்ள போதிலும் அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டு மேலும் இரண்டு முறை, வட்டி விகிதங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும்பாலான வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு தங்களின் பணவீக்கக் கொள்கைகளை எளிதாக்க வாய்ப்பளிக்கும் என கூறுகிறார்.
டாலரின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், இது முதலீட்டாளர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும். எனவே, வளர்ந்து வரும் பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவார்கள் என்றும், இதில் இந்தியாவும் பயனடையும் என்றும் கௌல் விளக்கினார்.
இந்தியாவின் சில துறைகளில் சீரற்ற வளர்ச்சி காணப்படுவதாக கௌல் சுட்டிக்காட்டினார். "இந்தியா செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பெரிதாகப் பங்களிக்கவில்லை. நுகர்வு அதிகரித்து வந்தாலும், கடன் வளர்ச்சியில் பெரிய ஏற்றம் இல்லை. தகவல் தொழில்நுட்பத் துறை சிறப்பாக செயல்பட்டாலும், அமெரிக்காவின் வளர்ச்சி மெதுவாக இருப்பதால், அது சவால்களை சந்திக்கிறது" என்றார்.
நுகர்வுத் துறை ஒரு பிரகாசமான இடமாக இருந்தாலும், மற்ற துறைகள் வளர்ச்சி பெற அதிக நேரம் ஆகலாம். எனவே, மற்ற துறைகளுக்கான வளர்ச்சி மதிப்பீடுகள் மிதமாகவே இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கோல்ட்மேன் சாக்ஸ் தனது முழு ஆண்டு வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டை 11% ஆகப் பராமரிப்பதாக கௌல் தெரிவித்தார். ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு அறிவிப்புக்குப் பிறகு நுகர்வுத் துறையில் சென்டிமென்ட் மேம்பட்டுள்ளதால், சில வருவாய் மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம் என்கிறார். இந்த ஆண்டு, வளர்ந்து வரும் ஒட்டுமொத்த சந்தைகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா 20% க்கும் மேல் குறைவான செயல்திறனைக் கண்டுள்ளது என கூறியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் ஆண்டு அடிப்படையில் இந்தியா கண்ட மிக மோசமான செயல்திறன் இது என்றும் கௌல் கூறினார்.
"சீனாவில் நாங்கள் தொடர்ந்து அதிக முதலீடுகளை வைத்துள்ளோம். ஆனால், இந்தியா சீனாவை மிஞ்ச வேண்டுமெனில், மதிப்பீடுகள் குறைவது மட்டுமல்லாமல், சிறப்பான வளர்ச்சி மற்றும் வருவாய் தேவை" என்று கௌல் கூறியுள்ளார். நிதித் துறை சிறப்பாகச் செயல்பட்டு சந்தைகளை மேம்படுத்தும் திறன் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications