இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானாலும் ஒரு நிறுவனத்தின் பங்கு மட்டும் ஒரே நாளில் 11% உயர்ந்து முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் பொதுத்துறை டீத்தூள் உற்பத்தி நிறுவனம் ஆண்ட்ரூ யூலே & கம்பெனி லிமிடெட் (Andrew Yule & Company Ltd). இந்த நிறுவனம் தயாரிக்கும் தேநீரை, அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள பணியாளர் உணவகங்களில் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, பங்குச்சந்தையில் ஆண்ட்ரூ யூலே & கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 11 சதவீதம் வரை உயர்ந்தன. காலை 10 மணி அளவில் 25 ரூபாய்க்கு வர்த்தகமான இந்த பங்கு , 10.30 மணி அளவில் 30 ரூபாய் என உயர்ந்தது. பின்னர் 27 ரூபாய் வரை சரிந்து மீண்டும் 30 ரூபாயில் வர்த்தகமாகி வருகிறது.

மத்திய அரசு தங்களது அமைச்சகங்களின் கீழ் இயங்கும் உணவகங்களில் ஆண்ட்ரூ யூலே நிறுவனத்தின் தேநீரை முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியது. இது அந்நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்க உதவும் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக, முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டு, ஆண்ட்ரூ யூலே நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென 11% வரை உயர்ந்துள்ளன.
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆண்ட்ரூ யூலே, 1863இல் தொடங்கப்பட்ட ஒரு பழமையான நிறுவனம். இது மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் பல தேயிலை தோட்டங்களை நிர்வகித்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக மோசமான வானிலை, தேயிலை விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான சவால்களை இந்நிறுவனம் எதிர்கொண்டு வந்தது. இந்நிலையில், அரசின் இந்த புதிய அறிவிப்பு நிறுவனத்தின் நிதி நிலையை வலுப்படுத்த உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
1246 கோடி ரூபாய் சந்தை மூலதனம் கொண்ட நிறுவனம் இது. 2025ஆம் ஆண்டில் 374 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள இந்நிறுவனம் 25 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருக்கிறது. இதன் பங்கில் 89% பிரமோட்டர்களிடமும் சில்லறை முதலீட்டாளர்கள் 8.55% பங்குகளையும் கொண்டுள்ளனர். 2024ஆம் ஆண்டு முதல் சரிவிலேயே இருக்கும் இந்த பங்கு தற்போது தான் படிப்படியாக உயர தொடங்கியுளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த இந்த பாரம்பரிய நிறுவனம் மீண்டு வரவும், அதன் தேயிலை விற்பனையை நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் ஒரு உந்துதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

