1992ல் ஆரம்பிக்கப்பட்ட கிராவிடா இந்தியா லிமிடெட் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய லீட் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும், லீட், அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சியில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இதுதவிர, பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள், கேபிள் , அலுமினியம்,பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிறபொருட்களை மறுசுழற்சி செய்வதில் இந்நிறுவனம் நிபுணத்துவம் வாய்ந்தது. மேலும், தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கிராவிடா இந்தியா நிறுவனம் தனது கடந்த டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.77.93 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 29.30 சதவீதம் அதிகமாகும்.

2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.60.3 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 31.49 சதவீதம் அதிகரித்து ரூ.996.42 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.757 கோடி ஈட்டியிருந்தது.
2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த செலவினம் 35.2 சதவீதம் அதிகரித்து ரூ.915.69 கோடியாக உயர்ந்துள்ளது. கிராவிடா இந்தியா நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருப்பது முதலீட்டாளர்களிடம் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகளும் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை அளித்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 118.6 சதவீதம் ஆதாயத்தை கொடுத்துள்ளது. அதேசமயம், இதே காலத்தில் நிப்டி 9.43 சதவீதம் மட்டுமே ஏற்றம் கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 3300 சதவீத மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது.
இந்நிறுவனம் தனது வர்த்தக வளர்ச்சிக்காக பல்வேறு இலக்குகளை நிர்ணயம் செய்து அதனை நோக்கி செயல்பட்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.54 சதவீதம் உயர்ந்து ரூ.2,072.35ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.15,295 கோடியாக இருந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications