எஃப்எம்சிஜி துறையை சேர்ந்த ஸ்மால்கேப் பங்கு ஜிஆர்எம் ஓவர்சீஸ். இந்நிறுவனம் பிராண்டட் மற்றும் பிராண்டட் அல்லாத பாசுமதி அரிசியை அரைத்தல்,பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது கோதுமை மாவு சந்தையிலும் களம் இறங்க உள்ளது. தனது கோதுமை மாவு தயாரிப்பை மக்கள் மத்தியில் விரைவாக எடுத்து செல்லவும், பிரபலப்படுத்தவும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை தனது பிராண்ட் தூதராக ஜிஆர்எம் ஓவர்சீஸ் நியமித்துள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மானை கானை விளம்பர தூதராக நியமனம் செய்துள்ளதாக ஜிஆர்எம் ஓவர்சீஸ் நேற்று அறிவித்தது. இதனையடுத்து, நேற்று பங்குச் சந்தை நிலவரம் மந்தமாக இருந்தபோதிலும், ஜிஆர்எம் ஓவர்சீஸ் பங்கு விலை கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஜிஆர்எம் ஓவர்சீஸ் பங்கின் விலை 8 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் சுமார் 4 சதவீதம் அதிகரித்து ரூ.260.60ல் முடிவுற்றது.

ஜிஆர்எம் ஓவர்சீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அதுல் கார்க் கூறுகையில், எங்கள் புதிய பிராண்ட் தூதர் சல்மான் கானின் ஆதரவுடன் 10x கிளாசிக் சக்கி ஃப்ரெஷ் ஆட்டாவிற்கான ஒரு லட்சிய பிரசாரத்தை தொடங்குவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனங்களில் ஒன்றாக, தொழில்துறையை முன்னோக்கி கொண்டு செல்வதில், குறிப்பாக பேக்கேஜ் செய்யப்பட்ட ஸ்டேபிள்ஸ் சந்தையில், புதுமை மற்றும் தரத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று தெரிவித்தார்.
ஜிஆர்எம் ஓவர்சீஸ் நிறுவன பங்கு நீண்ட கால அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 2,467 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.244.51 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அதே காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.11.95 கோடி ஈட்டியுள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் ஜிஆர்எம் ஓவர்சீஸ் வருவாயாக ரூ.1,186 கோடியும், நிகர லாபமாக ரூ.52 கோடியும் ஈட்டியிருந்தது.
Story Written: Subramanian


Click it and Unblock the Notifications