இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் ஹெச்சிஎல் டெக் கடந்த சில வருடங்களாகச் சிறப்பான வர்த்தகம் + பங்கு மதிப்பு வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் வேளையில் நேற்று வெளியிட்ட செம்படம்பர் காலாண்டு முடிவுகள் இன்று பங்குச்சந்தையில் மிகப்பெரிய அளவில் எதிரொலித்துள்ளது.
ஹெச்சிஎல் டெக் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் மொத்த லாபமாக 5,132 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது, இது கடந்த வருடத்தின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் சுமார் 21 சதவீதம் அதிகமாகும். இதேபோல் வருவாய் அளவுகளைப் பார்க்கும் போது 12 சதவீதம் உயர்ந்து 35,620 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதை விட முக்கியமாக 2026-27ஆம் நிதியாண்டில் இடைக்கால ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு சுமார் 12 ரூபாயை அறிவித்துள்ளது. இது அனைத்து இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் இந்நிறுவனத்திற்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
இதன் வாயிலாக இன்று மும்பை பங்குச்சந்தையில் ஹெச்சிஎல் பங்குகள் அதிரடியாக 5.42 சதவீதம் உயர்ந்து 1,286 ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது. இதோடு டிசிஎஸ், டெக் மஹிந்திரா, இன்போசிஸ் பங்குகள் 2 முதல் 5.25 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இந்த அதிரடியான உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் மற்ற நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஏற்படும் வர்த்தக பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அதன் லாப மார்ஜின்-ஐ குறைத்து வரும் நிலையில், 2027ஆம் நிதியாண்டுக்கான EBIT மார்ஜின் தொடர்ந்து 17.5 - 18.5 சதவீத அளவிலேயே வைத்துள்ளது. இதேபோல் ஏஐ பிரிவில் வர்த்தகத்தைப் பெற துவங்கியுள்ள ஹெச்சிஎல் செப்டம்பர் காலாண்டில் 3.26 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களைப் பெற்று அசத்தியுள்ளது.
இதேவேளையில் காலாண்டு முடிவுகள் வெளியிட்ட பின்பு முதலீட்டு நிறுவனங்கள் மாறுபட்ட ரேட்டிங்-ஐ வைத்திருந்தாலும், யாரும் மாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக CLSA, ஜேபி மோர்கள், சிட்டி ஆகியவை தனது ரேட்டிங்-ஐ நிலையாக வைத்திருப்பதும் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
டிசிஎஸ் ஏஐ பிரிவில் 3.1 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்று இருக்கும் வேளையில், ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஏஐ அட்வான்ஸ் வருவாய் அளவு 219 மில்லியன் டாலராக உள்ளது, இது கடந்த காலாண்டைக் காட்டிலும் 28.4 சதவீதம் அதிகமாகும். மேலும் ஹெச்சிஎல் செப்டம்பர் காலாண்டில் 6450 ஊழியர்களைச் சேர்த்த நிலையில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 230,339 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ் இன்று கிட்டத்தட்ட 700 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியான உயர்வைச் சந்தித்த துறையாக ஐடி சேவைத் துறை உள்ளது.
முதலீட்டுச் சந்தையில் புதிதாக FII முதலீடுகள் வரதுவங்கியுள்ளது, இதற்கு முக்கிய காரணமாக ஆர்பிஐ வீக்எண்டில் எடுத்த 2 முக்கியமான நடவடிக்கை தான். நேற்றைய வர்த்தகத்தில் 1 சதவீதம் உயர்ந்த ரூபாய் மதிப்பு, இன்று 60 பைசா உயர்ந்து வலு சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications
