பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த சில பட்ஜெட்டுகளில் மூலதன செலவினங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்த சூழலில், இனிமேல் வளர்ச்சிக்காக மூலதன செலவினங்கள் அதிகரிப்பை மட்டுமே நம்பி கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது, நுகர்வை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியமாகும் என்பதை உணர்ந்தது. இதனையடுத்து அண்மையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், வரி குறைப்பு உள்ளிட்ட நுகர்வை அதிகரிக்கும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
பிரைம் வெல்த் ஃபின்சர்வின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சக்ரவர்த்தி ஈடி பத்திரிக்கையிடம் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்த்தகத்தினருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதால், மக்களின் செலவழிக்கும் வருமானம் அதிகரிக்கும். தனிநபர் மேம்பாடுகள், ஹோட்டல்களில் உணவருந்துவது, பயணம் மற்றும் லைப் ஸ்டைல் அனுபவங்களுக்காக மக்கள் கூடுதலாக செலவழிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் தங்கள் இடங்களை புதுப்பிக்கவும், சிறந்த கேஜெட்களில் முதலீடு செய்யவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், ஓய்வு நேர நடவடிக்கைகளுக்கு செலவிடவும் அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். நிபுணர்களின் கூற்றுப்படி, செலவழிக்கும் வருமானத்தில் ஏற்படும் அதிகரிப்பு, லைப் ஸ்டைல், முக்கிய பொருட்கள்,சுற்றுலா, வாகனம் மற்றும் ஹோட்டல்கள் போன்ற துறைகளில் செலவினங்களுக்கு வழிவகுக்கும்.
மத்திய அரசு பட்ஜெட் தொடர்பான தனது ரூட்டை மாற்றியது போல், பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்றால் தங்களது முதலீட்டை யுக்தியில் மாற்ற செய்வது அவசியம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். பட்ஜெட்டுக்கு பிறகு, பங்குகளில் ரூ.10 லட்சம் முதலீடு செய்ய விரும்பும் ஒரு முதலீட்டாளர் எப்படி தனது மூலதனத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் மற்றும் எந்த துறைகளை சேர்ந்த பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
மோதிலால் ஒஸ்வாலின் ஆராய்ச்சி மற்றும் செல்வ மேலாண்மை துணை தலைவர் சினேகா போடார் கூறுகையில், நாங்கள் மொத்த நிதியில் 75 சதவீதத்தை பெரிய நிறுவன பங்குகளுக்கே ஒதுக்கவே ஆதரவு தெரிவிப்போம். அதேசமயம், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளுக்கு எஞ்சியவற்றை ஒதுக்கீடு செய்யலாம் என்று தெரிவித்தார்.
ஆனந்த் ரதி வெல்த் நிறுவனத்தின் மியூச்சுவல் பண்ட்ஸ் தலைவர் ஸ்வேதா ரஜனி கூறுகையில், மொத்த மூலதனத்தில் 55 சதவீதத்தை பெரிய நிறுவன பங்குகளிலும், மிட் கேப் பங்குகளில் 20 சதவீதமும், எஞ்சிய 25 சதவீதத்தை ஸ்மால் கேப் பங்குகளிலும் முதலீடு செய்யலாம் என தெரிவித்தார்.
அதேசமயம், இந்த ஆண்டில் எந்த துறைகளில் முதன்மையாக முதலீடு செய்யலாம் என்ற கேள்விக்கு, பெரும்பாலான நிபுணர்கள், நுகர்வு சார்ந்த நிறுவன பங்குகளை ஒரு மனதாக ஆதரித்தனர். இந்த பங்குகளில் நமது மொத்த மூலதனத்தில் 38 சதவீதத்தை ஒதுக்கலாம் என்று தெரிவித்தனர்.
எஃப்எம்சிஜி, சில்லரை விற்பனை, ஸ்டேபிள்ஸ்,வாகனம், சுற்றுலா, விருந்தோம்பல், இ காமர்ஸ், ஒயிட் குட்ஸ் போன்ற துறைகள் முதலீட்டு நோக்கங்களுக்காக நுகர்வு என்ற பார்வையில் பார்க்கப்படுகின்றன. நுகர்வுக்கு அடுத்தப்படியாக, வங்கி மற்றும் நிதி சேவைகள் துறையை சேர்ந்த பங்குகளில் 23 சதவீதம் ஒதுக்கீடு செய்யலாம்.
அடுத்ததாக ஐடி மற்றும் அது சார்ந்த துறைகள், பொறியியல் சாதனங்கள் மற்றும் தொழில்துறை சேர்ந்த பங்குகளிலும் ஒரு பகுதி நிதியை முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications