ஆசை காட்டி மோசம் செய்து விட்டார்களா என பங்குச் சந்தை வர்த்தகர்கள் இன்று சமூக வலைதளங்களில் புலம்பும் அளவிற்கு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்திய பங்குச் சந்தையில் மிக வேகத்தில் உயர்ந்து வரும் F&O (Futures and Options) வர்த்தகத்தை கட்டுப்படுத்த, அதன் மீதான STT (Securities Transaction Tax) வரியை இந்த பட்ஜெட்டில் கணிசமாக உயர்த்தியுள்ளார். டிரேடிங் என்பது வெறும் லாட்டரி அல்ல என அரசு எச்சரித்து வந்த நிலையில், தற்போது வரியின் மூலமே அதற்கு கடிவாளம் போட்டுள்ளது.

சிறு முதலீட்டாளர்கள் லாபத்தை விட நஷ்டத்தையே அதிகம் சந்திக்கிறார்கள் என்ற செபி (SEBI) அறிக்கையின் எதிரொலியாக இந்த நடவடிக்கை பார்க்கப்பட்டாலும், அன்றாட வருமானத்திற்காக இதையே நம்பியிருக்கும் நடுத்தர வர்க்க டிரேடர்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. இனி ஒவ்வொரு டிரேடிலும் அரசுக்கான பங்கு அதிகரிக்கும் என்பதால், லாபம் ஈட்டுவது என்பது இன்னும் சவாலான ஒன்றாக மாறப்போகிறது. இந்த சூழலில் தான் இந்திய பங்குச் சந்தையானது ரத்தக் களரியாக மாறியுள்ளது.
எவ்வளவு அதிகரிப்பு?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பங்கு வர்த்தகர்களுக்கு ஒரு மிகப்பெரிய அறிவிப்பை கொடுத்துள்ளார். அது ஊக வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும், சிறு முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகத்திற்கான STT வரி விகிதங்களை அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது.
இந்த வரி விகிதமானது பியூச்சர்ஸ் வர்த்தகத்திற்கு முன்னதாக 0.02% என்ற நிலையில் இருந்தது. இது தற்போது 150% உயர்த்தப்பட்டு 0.05% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே ஆப்சன்ஸ் (பிரீமியம்) வர்த்தகத்திற்கு 0.1%-ல் இருந்து 0.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆப்சன்ஸ் (எக்சர்சைஸ்) 0.125%-ல் இருந்து, 0.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பாதிப்பு என்ன?
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் இனி டிரேடிங் செலவானது சற்று அதிகரிக்கும். குறிப்பாக அதிக அளவில் வர்த்தகம் செய்யும் இன்ட்ராடே மற்றும் ஸ்கால்பிங் டிரேடர்களுக்கு இந்த வரி உயர்வு அவர்களின் நிகர லாபத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனிடையே வர்த்தக அளவு குறையும் என்ற அச்சத்தின் மத்தியில், அதை வர்த்தக அடிப்படையாக கொண்டுள்ள பிஎஸ்இ, ஏஞ்சல் ஒன், குரோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன.
பங்குச் சந்தையில் நிலவும் அதீத ரிஸ்க் மற்றும் சூதாட்டம் போன்ற வர்த்தகத்தை குறைத்து, முதலீட்டாளர்களை நீண்ட கால முதலீட்டை நோக்கி நகர்த்துவதே இந்த வரி அதிகரிப்பின் நோக்கமாக பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications