கடந்த மார்ச் 12, 2020 அன்று தான், சென்செக்ஸ், தன் வாழ்நாளில் இல்லாத அளவுக்கு சுமார் 2,919 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
அடுத்த 4 நாட்களில் மீண்டும் சென்செக்ஸ் தன் வாழ்நாளில் இல்லாத அளவுக்கு, தன் இரண்டாவது பெரிய சரிவாக 2,700 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் நிறைவடைந்து இருக்கிறது. இப்படி ஒவ்வொரு வாரமும் சென்செக்ஸ் சரிவில் புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருந்தால் முதலீட்டாளர்கள் எப்படி நிம்மதியாக இருப்பார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்செக்ஸ் 34,103 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 33,103 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, சென்செக்ஸ் குறைந்தபட்சமாக 31,276 புள்ளிகளைத் தொட்டது. இன்றைக்கான வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 31,390 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 2,713 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்து இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 9,587 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 9,199 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 757 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.
சென்செக்ஸில் 30க்கு 30 பங்குகளுமே இறக்கத்தில் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,618 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 439 பங்குகள் ஏற்றத்திலும், 2,019 பங்குகள் இறக்கத்திலும், 160 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,618 பங்குகளில் 16 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 478 பங்குகளின் விலை 52 வார இறக்கத்தையும் தொட்டு வர்த்தகமாயின.
சொல்லிக் கொள்ளும் படி நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் என்றால் அது யெஸ் பேங்க் மட்டுமே. இண்டஸ் இண்ட் பேங்க், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், வேதாந்தா, ஹெச் டி எஃப் சி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஐரோப்பிய சந்தைகள் எல்லாம் சுமார் 6 - 8.8 சதவிகிதம் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசிய சந்தைகளில் எல்லா சந்தைகளும் 2.4 - 8.7 % வரை எல்லா சந்தைகளும் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74.24 ரூபாயாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 32.86 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications