மும்பை: பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு சந்திரபாபு நாயுடு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து இருக்கிறார். அவர் ஆந்திர மாநில முதலமைச்சராக பொறுப்பெடுத்தது மட்டும் இல்லாமல், மத்தியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியிலும் முக்கிய அங்கம் வகிக்கிறார்.
இதன் காரணமாக பங்குச்சந்தையில் ஆந்திரா மாநிலத்துடன் தொடர்புள்ள மற்றும் சந்திரபாபு நாயுடு உடன் தொடர்புள்ள நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளன.

பங்குச்சந்தை நிபுணர்கள் ஆந்திராவுடன் தொடர்புடைய பங்குகளை நாயுடு பங்குகள் என்றும் பொதுத்துறை நிறுவன பங்குகளை மோடி பங்குகள் என்றும் அழைக்கின்றனர். அந்த வகையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி இந்த இரண்டு வார காலத்தில் மோடி பங்குகளை விட நாயுடு பங்குகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளன.
தேர்தல் முடிவுகள் வெளியாகி எட்டு வர்த்தக நாட்கள் முடிவடைந்துள்ளன. இதில் சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்துடன் தொடர்புடைய பங்குகள் கிட்டதட்ட 20,000 கோடி ரூபாய் என்ற மதிப்பில் உயர்ந்துள்ளன.
பங்குச்சந்தையை பொறுத்தவரை பிரதமர் மோடி எப்படி ஒரு முதலீட்டாளர்களுக்கு பிடித்த ஒரு தலைவராக இருக்கிறாரோ அதேபோல தான் சந்திரபாபு நாயுடுவும். ஏனெனில் சந்திரபாபு நாயுடு உற்பத்தி, உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சிக்கு சாதகமான கொள்கைகளை கொண்டுவரக் கூடியவர்.
எனவே அவரது வருகை முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 24 நிறுவனங்கள் ஜூன் 4ஆம் தேதி முதல் தற்போது வரை பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளன என எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதன்படி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அஞ்சானி ஃபுட்ஸ் நிறுவனம் 8 வர்த்தக நாட்களில் 69% உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் கிரேன் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 53 % அதிகரித்துள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் மகன் பங்கு வைத்திருக்கக்கூடிய ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 40% உயர்ந்துள்ளது. கேசிபி, ஆந்திரா சுகர் இண்டஸ்ட்ரீஸ், லிகிதா இன்ப்ராஸ்ட்ரக்சர் , ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 20% உயர்ந்துள்ளன. ஆந்திரா பெட்ரோ கெமிக்கல்ஸ், சாகர் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சராசரியாக 15 %க்கும் மேல் உயர்ந்துள்ளன.
ஒட்டுமொத்தமாக ஆந்திராவை சேர்ந்த 24 பங்குகளின் மதிப்பு என்பது ஜூன் 4 முதல் தற்போது வரை 20,000 கோடி வரை உயர்ந்து ஒட்டுமொத்தமாக 2,18,809 கோடிகளாக அதிகரித்துள்ளது.
வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு மேம்பாட்டுக்கு சாதகமான கொள்கைகளை கொண்டுவரக்கூடிய ஒரு தலைவர் சந்திரபாபு நாயுடு என்ற பெயர் நீடிப்பதால் அவரது வருகைக்குப் பிறகு ஆந்திராவில் இந்த துறைகளின் பங்குகள் வளர்ச்சி அடையும் என முதலீட்டாளர்கள் பெரிய அளவில் நம்பிக்கை வைத்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டில் இருக்கக்கூடிய பொதுத்துறை நிறுவன பங்குகள் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று 16 % சரிவை கண்டன. இதுவரை அதிலிருந்து இந்த நிறுவனங்களால் முழுமையாக மீள முடியவில்லை. கிட்டதட்ட 6% என்ற அளவுதான் அவை மீண்டு வந்துள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications