இந்தியப் பங்குச்சந்தையில் இருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பணம் நவம்பர் மாதத்திற்கு முன்பு வரையில் காற்றோடு காற்றாகக் கரைந்து வந்த நிலையில், தற்போது அப்படியே தலைகீழாக மாறி, பன்னாட்டு முதலீட்டாளர்களின் ஒரே பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது இந்தியா. என்ன நடந்தது..?
அமெரிக்காவில் மிட்டேர்ம் தேர்தல் முடிவுக்குப் பின்பு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டை போடப்படும் என்ற நிலைப்பாடு, என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் 3 பெண்கள் உடன் வைத்திருந்த கள்ள உறவு விவகாரம் ஆகியவை AI நிறுவனப் பங்குகள் சரிவுக்குக் கொண்டு சென்றது.

இந்த நிலையில், அமெரிக்க ஏஐ துறையில் பெரும் தொகையை முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைப் பல்வேறு சந்தைகளுக்கு மாற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இந்தியப் பங்குகளில் முதலீடு செய்யும் iShares MSCI India ETFல் கடந்த வாரம் அதிக அளவில் முதலீடு குவிந்துள்ளது. இந்த சம்பவத்திற்கும், என்விடியா விவகாரத்திற்கும் தொடர்பு உள்ளது.
சுமார் 6.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள iShares MSCI India ETFல் கடந்த வாரம் மட்டும் 316 மில்லியன் டாலருக்கும் அதிகமான புதிய முதலீடு குவிந்துள்ளது. இந்த 316 மில்லியன் டாலர் தொகை ஜூன் 2025க்குப் பிறகு பதிவான அதிகப்படியான வாராந்திர முதலீட்டு அளவாகும்.
இந்த முதலீட்டு இந்த வாரமும் தொடரும் காரணத்தால் இதுவரை 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடு வந்துள்ளது. உலகளவில் ஆசியா மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச்சந்தைகளுடன் ஒப்பிடும்போது கடந்த 2 ஆண்டுகளாக இந்தியப் பங்குச்சந்தை மந்தமான லாபத்தைக் கொடுத்துப் பின்தங்கியிருக்கிறது.
ஆனால் ஏஐ துறையில் முதலீட்டு நிலைப்பாடு வெடித்த பின்பு பன்னாட்டு முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது மட்டும் அல்லாமல் ஏஐ துறை மீது வெளிப்பாடு இல்லாத காரணத்தால் இந்தியச் சந்தையில் முதலீடு செய்வது என்பது பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக மாறியுள்ளது என Global X India Active ETF-ன் மூத்த போர்ட்ஃபோலியோ மேலாளர் மால்கம் டோர்சன் தெரிவித்துள்ளார்.
இதோடு இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி50 குறியீடு 25,500 புள்ளிகளைத் தொட்டு, பிப்ரவரி 26 பிறகு இந்த அளவை எட்டிய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அமெரிக்கா சந்தையில் ஏற்பட்ட ஏஐ வீழ்ச்சியும், கச்சா எண்ணெய் விலை சரிவும் இந்தியப் பங்குச்சந்தைக்குப் பெரியளவில் பலன் அளித்து வருகிறது.
இதன் எதிரொலியாக இந்த மாதத்தில் மட்டும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சுமார் 10% உயர்ந்துள்ளன. இந்த அதிரடியான வளர்ச்சிக்கு உதவியது வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள்.
FPI முதலீட்டாளர்கள் இந்த நவம்பர் மாதத்தில் இதுவரை சுமார் 9.53 பில்லியன் டாலர் முதலீடு செய்து இந்திய பங்குச்சந்தையைத் தூக்கி நிறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
