மும்பை: 2005ஆம் ஆண்டில் சீனாவில் இருந்ததைப் போலவே தற்போது இந்தியாவில் உற்பத்தி துறை இருப்பதாக கார்னெலியன் ஆசெட் மேனேஜ்மெண்ட் (Carnelian Asset Management) நிறுவனத்தின் நிறுவனர் விகாஷ் கேமானி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் விகாஷ் கேமானி இந்தியாவின் உற்பத்தி துறை குறித்தும் அதில் இருக்கும் வாய்ப்புகள் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தற்போதைய சூழலில் இந்திய பங்குகள் மலிவானதாகவும் இல்லை, விலை அதிகமானதாகவும் இல்லை எனவே இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு அவர்களின் முதலீடு வளர்வதற்கான வாய்ப்பு மிக வலுவாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்திய பங்குச் சந்தை அடுத்தடுத்து உச்சத்தை எட்டும் என உறுதி அளித்த அவர், அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்திய பங்குச் சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தை தரக்கூடியவையாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
முதலீட்டாளர்கள் சிறந்த முறையில் மேலாண்மை செய்யப்படும் மற்றும் நல்ல பிசினஸ் மாடல் கொண்ட நிறுவனங்களின் பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியா தற்போது மாறிவரும் கட்டத்தில் இருக்கிறது என தெரிவித்த அவர் இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது உற்பத்தி துறை சார்ந்த பங்குகள் மிகச் சிறந்த வளர்ச்சி அடையும் என கூறியுள்ளார். இதற்கு காரணம் இந்தியாவை சேர்ந்த இளைஞர்கள் உற்பத்தி துறையில் பெரிய அளவிலான வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர் என கூறினர்.
உற்பத்தி மற்றும் நுகர்வுத் துறை ஆகிய இரண்டும் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ள கேமானி, 2005 ஆம் ஆண்டு சீனாவின் உற்பத்தி நிலவரம் எப்படி இருந்ததோ தற்போது இந்தியா அந்த நிலையில் இருக்கிறது என்றும், இந்த துறையில் மிகப்பெரிய அளவிலான செல்வ வளம் உருவாக்குவதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது என்றும் கூறினார்.
வங்கி சார்ந்த நிறுவனங்கள் சிறந்த வளர்ச்சி காணும் என்றும் அவர் தெரிவித்தார். ஒரு குறிப்பிட்ட துறை வளர்ச்சி அடைகிறது என்பதற்காகவே அதிக விலை கொண்ட பங்குகளை வாங்கக்கூடாது என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.
அண்மையில் வெளியான பங்குகளில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்கு கணிசமான வளர்ச்சியை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றார். தற்போது இந்திய மின்சார சந்தையில் இந்த நிறுவனம் 35 முதல் 40 சதவீத பங்கினை கொண்டு இருக்கிறது என்றும் விரைவில் இது அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு ரசாயனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை மீண்டு வந்திருப்பதால் அதில் முதலீடு செய்வதும் சிறந்தது என யோசனை தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications