மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியால் இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய வர்த்தகத்தில் 1% அதிகமாக உயர்ந்தன. சென்செக்ஸ் 1,305 புள்ளிகளும், நிஃப்டி 413 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. இதில் ஆட்டோ, ஃபைனான்ஸ் மற்றும் எனர்ஜி ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க லாபத்துடன் அனைத்துத் துறைகளும் எற்றத்தில் உள்ளன. அதேபோல்,குறிப்பிடப்படும் விதமாக, சமீபத்திய இழப்புகளுக்குப் பிறகு அதானி குழுமப் பங்குகள் 6% வரை உயர்ந்துள்ளன.
இந்திய முக்கிய பங்குச் சந்தை குறியீடுகள் இன்று சிறப்பான ஏற்றத்தில் வர்த்தமாகின்றன. அனைத்து துறைகளிலும் முதலீட்டாளர்கள் ஆர்வம் காணப்படுகிறது. அதன்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,305 புள்ளிகள் உயர்ந்து 80,423 ஆகவும், நிஃப்டி 413 புள்ளிகள் உயர்ந்து 24,321 ஆகவும் வர்த்தகமாகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில், மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 233 இடங்களையும், ஜார்க்கண்டில் எதிர்க்கட்சி கூட்டணியும் வெற்றி பெற்றது. இதனால் முதலீட்டாளர்கள் ஆர்வம் இன்றைய பங்குச் சந்தையில் எதிரொலித்துள்ளது.
இதற்கிடையில், இன்றைய சென்செக்ஸ் பங்குகளில், எல்&டி, எம்&எம், அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ மற்றும் என்டிபிசி ஆகியவை 2.5% முதல் 4% வரை உயர்ந்து அதிக லாபத்தை ஈட்டின. அத்துடன் ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவையும் உயர்வுடன் துவங்கின. பிஎஸ்இயில் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.8.66 லட்சம் கோடி உயர்ந்து ரூ.441.37 லட்சம் கோடியாக உள்ளது.
துறைகள் வாரியாக, நிஃப்டி ஆட்டோ, நிதிச் சேவைகள், பொதுத்துறை வங்கி, ரியாலிட்டி, நுகர்வோர் பொருட்கள் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை 2-3% உயர்வுடன் துவங்கின. நிஃப்டி பேங்க், எஃப்எம்சிஜி, மெட்டல்ஸ் மற்றும் பார்மா ஆகியவையும் 2% வரை லாபம் கண்டன.
நிஃப்டி குறியீட்டில் அதிக லாபம் ஈட்டுபவர்களில், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் 5% உயர்வைக் காண்கிறது. பெல், ப்பிசிஎல், ஓஎன்ஜிசி, எல்&டி போன்ற பங்குகளும் கணிசமாக உயர்ந்து வருகின்றன. மறுபுறம் நிஃப்டி 50ல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், இன்ஃபோசிஸ், டாக்டர் ரெடி ஆகிய 3 பங்குகள் மட்டுமே சரிவில் காணப்படுகின்றன.
இந்த சிறப்பான சந்தை ஏற்றத்தில் முதலீட்டாளர்கள் லார்ஜ்கேப் பங்குகளில் கவனம் செலுத்துகின்றனர். பல லார்ஜ்கேப் பங்குகள் அவற்றின் 52 வாரம் அல்லது சமீபத்திய அதிகபட்சத்திலிருந்து 30% குறைந்துள்ளன.
அதானி பங்குகளில் மீட்சி: கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளில் $28 பில்லியன் சந்தை மதிப்பை இழந்த பிறகு, அதானி குழுமத்தின் பங்குகள் இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சுமார் 7% வரை உயர்ந்துள்ளன. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 6% உயர்ந்து ரூ.688 ஆகவும், அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகியவை 3-4% வரையிலும் உயர்ந்தன. அதானி வில்மர், அதானி போர்ட்ஸ், ஏசிசி மற்றும் அம்புஜா சிமென்ட் ஆகியவை 1-2% வரை ஏற்றம் கண்டன.
இதற்கிடையில், காலை 10.00 மணியளவில் சென்செக்ஸ் 1074 புள்ளிகள் உயர்வில் 80276 புள்ளிகளாகவும், நிஃப்டி 350 புள்ளிகள் உயர்வில் 24257 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications