பங்குச் சந்தையில் நீண்ட காலமாக சில நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித பெரிய முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும். இந்த பங்குகளில் முதலீடு செய்வதை பலரும் தவிர்த்து இருப்பர். ஆனால் எதிர்பாராத விதமாக அவர்களின் கணிப்புக்கு மாறாக குறுகிய காலத்தில் அந்த நிறுவன பங்குகளின் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டு இருக்கும். அதை பார்த்த பிறகு அய்யோ அந்த பங்கில் முதலீடு செய்யாமல் விட்டு விட்டோமே என்று பலரும் ஏங்குவர். அப்படி பலரையும் ஏங்க வைத்துள்ள பங்குதான் சுஸ்லான் எனர்ஜி. நாட்டின் முன்னணி காற்றாலை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று சுஸ்லான் எனர்ஜி. இந்நிறுவனம் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைத்தல், அவற்றை கையாளுதல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஆண்டு சுஸ்லான் எனர்ஜி பங்கு விலை ரூ.15க்கும் கீழ் இருந்தது. இருப்பினும் ஓராண்டில் இப்பங்கு விலை 340 சதவீதம் உயர்ந்துள்ளது. 2023 ஜூன் 28ம் தேதியன்று இந்நிறுவன பங்கு 52 வார குறைந்தபட்ச விலையான ரூ.14.19க்கு சென்றது. ஆனால் அதன் பிறகு சுஸ்லான் எனர்ஜி பங்கு விலை தொடர்ந்து உயர தொடங்கியது. பங்கின் விலை உயர்வுக்கு பின்னணியில் இந்நிறுவனம் பல்வேறு புதிய ஆர்டர்களை பெற்றது மற்றும் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு ரீனியூவபிள் ஆற்றலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவது உள்ளிட்டவை உள்ளன. கடந்த திங்கட்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.55.69ஐ எட்டியது.

கடந்த ஒரு மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை 20.87 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் சுஸ்லான் எனர்ஜி பங்கு விலை 50.51 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 296.71 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.52.78ஆக இருந்தது. இது அதன் 52 வார உச்ச விலையை காட்டிலும் சிறிது குறைவாகும்.
சுஸ்லாம் எனர்ஜி நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 2023 டிசம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.907.64 கோடி ஈட்டியிருந்தது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.24.17 கோடி சம்பாதித்து இருந்தது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் வருவாயாக ரூ.3,590.44 கோடி ஈட்டியுள்ளது. அந்த நிதியாண்டில் அந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,162.75 கோடி சம்பாதித்து இருந்தது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications