மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) நிறுவனம் ஆன்லைனில் ரயில் டிக்கெட் மற்றும் பிற பயண தொடர்புடைய சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் சிறந்த வர்த்தக வளர்ச்சி மற்றும் வலுவான நிதி நிலைமையை கொண்டுள்ளது. இதனால் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் விரும்பும் பங்குகளில் ஒன்றாக ஐஆர்சிடிசி உள்ளது. இந்நிறுவனம் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.
ஐஆர்சிடிசி நிறுவனம் 2024 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.341.08 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 13.69 சதவீதம் அதிகமாகும். 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.299.99 கோடி ஈட்டியிருந்தது. அதேசமயம் முந்தைய காலாண்டுடன் (2024 செப்டம்பர் காலாண்டு) ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 10.79 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.307.86 கோடி ஈட்டியிருந்தது.

2024 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 9.7 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,224.65 கோடியாக அதிகரித்துள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1,115.48 கோடி ஈட்டியிருந்தது. 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த செலவினம் 11.41 சதவீதம் உயர்ந்து ரூ.824.65 கோடியாக அதிகரித்துள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.740.17 கோடியாக இருந்தது.
ஐஆர்சிடிசி நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் பிப்.11ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2024-25ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு ரூ.2 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு இரண்டாவது இடைக்கால டிவிடெண்டாக ரூ.3 வழங்க (150 சதவீதம்) உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், பிப்ரவரி 20ம் தேதியை இந்த இடைக்கால டிவிடெண்ட் பெறுவதற்கு பங்குதாரர்களின் தகுதியை தீர்மானிப்பதற்கான பதிவு தேதியாக அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று ஐஆர்சிடிசி நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.88 சதவீதம் குறைந்து ரூ.751.25ஆக இருந்தது.
Story Written by: Subramanian


Click it and Unblock the Notifications