அதானி குழுமத்தின் பங்குகள் என்றாலே பலருக்கும் விருப்பமான பங்குகள் பட்டியலில் ஒன்று. சில காலம் அமைதியாக இருந்த அதானி கிரீன் எனர்ஜி (Adani Green Energy) பங்குகள், தற்போது மீண்டும் ஆட்டத்திற்கு தயாராகிவிட்டன எனலாம். சர்வதேச ஆய்வு நிறுவனமான மெக்குவாரி, இந்த பங்கிற்கு அவுட்பெர்ம்பார்ம் என ரேட்டிங் கொடுத்துள்ளது. அதோடு அதன் விலை இன்னும் 43% வரை உயர வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
ஏற்கனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதானி குழுமம் அசுர வேகத்தில் முன்னேறி வரும் நிலையில், இந்த புதிய ரிப்போர்ட் முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதானி கிரீன் பங்கின் அடுத்த டார்கெட் என்ன? மெக்குவாரி இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்க என்ன காரணம்? கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்.

தற்போதைய சந்தை விலையில் இருந்து 43% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கும் தரகு நிறுவனம், இலக்கு விலையை 1,320 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை அன்று வர்த்தக முடிவில் இப்பங்கானது 924.50 ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1.52 லட்சம் கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் வரும் 2030ம் ஆண்டிற்குள் எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யும் என்ற இலக்கை தரகு நிறுவனமானது மாற்றியுள்ளது. இது முன்பு 30 ஜிகாவாட் என இருந்த நிலையில், தற்போது அந்த இலக்கை 40 ஜிகாவாட்டிற்கும் மேல் உயர்த்தியுள்ளது. இது அதானி கிரீன் நிறுவனம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்வதையே காட்டுகிறது. இது நடப்பு நிதியாண்டில் 5 ஜிகாவாட் அளவுக்கு உற்பத்தியை விரிவாக்கம் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்த நிறுவனம் சாதாரணமாக வளர்ந்தால் கூட, அடுத்த 5 ஆண்டுகளில் அதன் லாபம் ஆண்டுக்கு 25% உயரும் என தரகு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. ஒருவேளை அதானி நிர்வாகம் திட்டமிட்டபடி வேகமாக முன்னேறினால், இந்த லாப வளர்ச்சி ஆண்டுக்கு 40% வரை கூட எகிரும் என தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்கேபி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் அறிக்கையின் படி, இப்பங்கானது 960 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது. தொடர்ந்து ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படும் இப்பங்கு, முக்கிய பிரேக் அவுட் விலையை உடைத்து தொடர்ந்து மேலாக சென்று கொண்டுள்ளது. இது மேற்கொண்டு அதிகரிக்க வழிவகுக்கும்.
மூன்றாவது காலாண்டு நிலவரத்தை பார்க்கும்போது, டிசம்பர் காலாண்டில் மொத்த வருமானம் 2,837 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு இது 1,993 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. எனினும் நிகர லாபம் 99% குறைந்து, 5 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 474 கோடி ரூபாயாக இருந்தது. பொதுவாக நிறுவனங்கள் தனது வளர்ச்சிக்காகவோ அல்லது கடன்களை அடைக்கவோ பெரும் தொகையை செலவிடும் போது, கையில் இருக்கும் லாபம் தற்காலிகமாக குறையலாம்.
அதானி கிரீன் நிறுவனத்தின் கையில் தற்போது குறைந்த லாபமே இருந்தாலும், அதன் வருமானம் மற்றும் மின்சார உற்பத்தித் திறன் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதை கருத்தில் கொண்டுதான், வெளிநாட்டு நிறுவனமான மெக்குவாரி இந்த பங்கை 43% வரை உயரலாம் என கணித்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications