புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று உலகளாவிய பங்குச்சந்தைகள் பெரும்பாலானவை மூடப்பட்டிருந்தாலும், இந்தியாவின் முக்கிய பங்குச்சந்தைகளான மும்பை பங்குச்சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE) ஆகியவை வழக்கம்போல் வர்த்தகத்திற்காகத் திறந்திருக்கும்.
இந்தியாவின் கமாடிட்டி சந்தைகளான MCX மற்றும் NCDEX காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலத்திற்கு திறந்து, 2026ஆம் ஆண்டில் முதல் வர்த்தகத்திற்கு தயாராக திறந்திருக்கும். ஆனால் மாலை வர்த்தகத்திற்கு மூடப்படும். உலக அளவில் சீனா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்க பங்குச்சந்தைகள் புத்தாண்டுக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், மூடப்பட்டிருக்கும். சீனா மற்றும் ஜப்பான் சந்தைகளுக்கு ஜனவரி 2 வரையும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும், 2026 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ வர்த்தக விடுமுறை நாட்காட்டி சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2026ல் ஈக்விட்டி, ஈக்விட்டி டெரிவேடிவ்ஸ் மற்றும் கரன்சி டெரிவேடிவ்ஸ் சந்தைகள் மொத்தம் 15 நாட்கள் மூடப்பட்டிருக்கும். 2026 புது வருடத்தில் முதல் பாதியில் விடுமுறை தினங்கள் லிஸ்ட்: ஜனவரி 26 (குடியரசு தினம்), மார்ச் 3 (ஹோலி), மார்ச் 26 (ராம நவமி), மார்ச் 31 (மகாவீர் ஜெயந்தி), ஏப்ரல் 3 (புனித வெள்ளி). மேலும், ஏப்ரல் 14 (அம்பேத்கர் ஜெயந்தி), மே 1 (மகாராஷ்டிரா தினம்) மற்றும் மே 28 (ஈத்) ஆகிய நாட்களிலும் சந்தைகள் இயங்காது.
2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஜூன் 26 (முஹர்ரம்), செப்டம்பர் 14 (விநாயகர் சதுர்த்தி), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) உள்ளிட்ட விடுமுறை தினங்கள் வருகின்றன. அக்டோபர் 20 (தசரா), நவம்பர் 10 (தீபாவளி பலிபிரதிபதா), நவம்பர் 24 (குருநானக் ஜெயந்தி) ஆகிய நாட்களிலும் சந்தைகள் செயல்படாது. டிசம்பர் 25ல் கிறிஸ்துமஸ் ஆண்டின் இறுதி விடுமுறை. 2026ல் தீபாவளி பண்டிகை வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) வருவதால், இந்நாளுக்குத் தனியாக வர்த்தக விடுமுறை அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications