இந்திய பங்குச்சந்தையில் ஜியோ பைனான்சியல் டிமெர்ஜர் வெற்றிகரமாக முடிந்த பின்பு ஐடிசி குழுமத்தின் ஹோட்டல் வர்த்தக பிரிவு பிரிக்கப்பட்டு உள்ளது. நீண்ட திட்டமிடலுக்கு பின்பு இன்று ஐடிசி லிமிடெட் நிறுவனத்தில் இருந்து ஐடிசி ஹோட்டல்ஸ் பிரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஐடிசி பங்குகள் மற்றும் ஐடி ஹோட்டல் பங்குகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மும்பை பங்குச் சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE) ஆகியவை ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனத்திற்கான விலையைத் தீர்மானிக்க இன்று ஒரு சிறப்பு வர்த்தகத்தை ஏற்பாடு செய்ததைத் தொடர்ந்து, 9-10 மணியளவில் இந்த சிறப்பு வர்த்தக அமர்வு நடந்து முடிந்து பங்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஐடிசி மற்றும் ஐடிசி ஹோட்டல்ஸ் டிமெர்ஜர் செயல்பாடுகள் முடிந்த பின்பு ஐடிசியின் பங்கு விலை குறைக்கப்பட்டது. என்எஸ்ஈ-இல், ஐடிசி பங்கு விலை ரூ.26 குறைந்து ரூ.455.60 ஆக மூடப்பட்டது, அதே சமயம் பிஎஸ்ஈ-இல் ரூ.27 ஆக குறைக்கப்பட்டு ரூ.455.00 என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
திங்கட்கிழமை ஐடிசி பங்கு இருப்பு புத்தகத்தில் யாரெல்லாம் ஐடிசி பங்குகளை வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு ஐடிசி ஹோட்டல் பங்கு வழங்கப்படும். இந்த நிலையில் 10 ஐடிசி பங்குகளுக்கு ஒரு ஐடிசி ஹோட்டல்ஸ் பங்கைப் பெறுவார்கள். அதாவது வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் யாரெல்லாம் ஐடிசி பங்குகளை வைந்திருந்தார்களோ அவர்களுக்கு ஐடிசி ஹோட்டல் பங்குகள் வழங்கப்படும்.
இந்த டிமெர்ஜர் பணியின் முடிவில் ஐடிசி ஹோட்டலின் 40 சதவீத பங்குகளை ஐடிசி நிறுவனம் வைத்திருக்கும், மீதமுள்ள 60 சதவீத பங்குகள் தற்போது எஞ்சியுள்ள பங்கு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.
நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் போன்ற குறியீடுகளில் ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனத்தை சேர்க்கவும் அதன் விலையை நிர்ணயம் செய்யவும் டிமெர்ஜர்-க்கு முன்பு ஐடிசியின் கடைசி மூடப்படும் விலைக்கும், சிறப்பு முன்கூட்டி வர்த்தக அமர்வுக்குப் பிந்தைய தொடக்க விலைக்கும் உள்ள வித்தியாசத்தில் தீர்மானிக்கப்படும்.
ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனம் தற்போது குறியீடுகளில் சேர்க்கப்பட்டாலும், அதன் சந்தை மூலதனம் மற்றும் விலை அதன் அதிகாரப்பூர்வ பட்டியலில் நிலையானதாக இருக்கும், இது பிப்ரவரி மத்தியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications