பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று தங்களுடைய 1 பங்கினை 100 பங்குகளாக பிரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் அவ்வப்போது தங்களது பங்குகளை பிரிப்பது, போனஸ் பங்குகளை வழங்குவது என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிடும். அந்த வகையில் ஜாம்ஸ்ரீ ரியாலிட்டி( Jamshri Realty) லிமிடெட் நிறுவனம் தங்களுடைய 1 பங்கினை 100 பங்குகளாக பிரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ஜாம்ஸ்ரீ ரியாலிட்டி நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 22,400 ரூபாயிலிருந்து 230 ரூபாயாக குறைந்துள்ளத. கடந்த 1907ஆம் ஆண்டு ஜாம்ஸ்ரீ ரஞ்சித் சிங் ஸ்பின்னிங் மில் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம் தற்போது ஜாம்ஸ்ரீ ரியாலிட்டி லிமிடெட் என்ற பெயரில் செயல்படுகிறது. ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் அண்மையில் தங்கள் நிறுவன பங்குகளை பிரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ஜாம்ஸ்ரீ ரியாலிட்டி நிறுவனம் தங்களுடைய 1 பங்கினை 100 பங்கு என பிரித்துள்ளது. இதனால் அந்த பங்கின் மதிப்பு கணிசமான அளவு குறைந்துள்ளது. ஒரு முதலீட்டாளரை பொருத்தவரை அவரது மொத்த பங்கு மதிப்பு என்பது அதே அளவில் தான் இருக்கும் ஆனால் பங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும். அதாவது 1000 ரூபாய் பேஸ் வேல்யூ கொண்ட பங்கானது தற்போது 10 ரூபாய் பேஸ் வேல்யூ கொண்ட பங்காக பிரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பங்கு பிரிப்புக்கான ரெகார்ட் டேட் என்பது ஆகஸ்ட் 16ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. அதாவது ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்த நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இந்த பங்கு பிரிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக ஒருவர் 10 பங்குகளை ஜாம்ஸ்ரீ ரியாலிட்டியில் வைத்திருக்கிறார் இதன் ஒரு பங்கு மதிப்பு 22,400 மொத்தமாக 10 பங்குகளின் மதிப்பு 2,24,000 என வருகிறது. இதுவே பங்குகளை பிரித்த பிறகு ஒரு பங்கின் மதிப்பு 224 என குறைந்து விடுகிறது. இந்த பத்து பங்குகளின் எண்ணிக்கை ஆயிரம் பங்குகள் என உயர்ந்திருக்கிறது.
தங்கள் நிறுவன பங்கினை முதலீட்டாளர்கள் வாங்கும் தன்மை கொண்ட ஒரு பங்காக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், டிரேடிங் வால்யூமை அதிகரிக்கும் நோக்கத்திலும் தான் பங்கு பிரிப்பினை மேற்கொண்டு இருப்பதாக ஜாம்ஸ்ரீ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை தளத்தில் இருக்கும் தகவலின் அடிப்படையில் ஜாம்ஸ்ரீ ரியாலிட்டி நிறுவனத்தின் பங்கு கடந்த மூன்று மாதங்களில் 51% அதிகரித்துள்ளது, கடந்த ஆறு மாதங்களில் இந்த பங்கு மதிப்பு 341% உயர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஜாம்ஸ்ரீ ரியாலிட்டி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 440% அதிகரித்துள்ளது .
Story written by: Devika


Click it and Unblock the Notifications