ஜியோ ஐபிஓ தான் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. எப்படியாவது ஜியோ பங்கினை வாங்கிட வேண்டும் என பலரும் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பம் செய்கின்றனர். ஜியோ பங்கினை வாங்க விரும்புவோர் மூன்று வழிமுறைகளில் விண்ணப்பம் செய்யலாம்.
சில்லறை முதலீட்டாளர் பிரிவு : சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு லாட்டிலும் 12 பங்குகள் உள்ளன. அதிகபட்ச விலையான 1,119 ரூபாயின்படி, ஒரு லாட்டிற்கு குறைந்தபட்சம் 13,428 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக 14 லாட்கள் வரை அதாவது 168 பங்குகள் வரை 1,87,992 ரூபாய் செலுத்தி இந்த பிரிவில் விண்ணப்பிக்கலாம்.

பங்குதாரர் பிரிவு : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் பங்குகளை டீமேட் வடிவத்தில் வைத்துள்ள தனிநபர்கள் மற்றும் எச்.யு.எப் முதலீட்டாளர்கள் இதற்கு தகுதியானவர்கள். உங்களிடம் ரிலையன்ஸின் ஒரே ஒரு பங்கு வைத்திருந்தாலும் இப்புதிய ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க தகுதி பெறலாம். இப்பிரிவிலும் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை விண்ணப்பிக்கலாம்.
தகுதியான ரிலையன்ஸ் பங்குதாரர்கள், பங்குதாரர் பிரிவின் கீழ் ஒரு விண்ணப்பமும், வழக்கமான சில்லறை அல்லது NII பிரிவின் கீழ் மற்றொரு விண்ணப்பமும் என இரண்டு தனித்தனி விண்ணப்பங்களை ஒரே PAN எண்ணை பயன்படுத்தி சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் ஐபிஓ பங்குகள் ஒதுக்கீடு பெறுவதற்கான வாய்ப்பை இரண்டு மடங்காக உயர்த்தி கொள்ள முடியும்.
ஊழியர்கள் : ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள் இதற்கு தகுதியானவர்கள். ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் நோட்டீஸ் பீரியடில் உள்ளவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை. ஊழியர்களுக்கான விண்ணப்ப வரம்பு 5 லட்சம் ரூபாய் வரை உள்ளது. இது மற்ற பிரிவுகளை விட கூடுதலான தொகையாகும். தகுதியான ஊழியர்களுக்கு ஒரு பங்குக்கு 54 ரூபாய் அதாவது 5% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஜியோ ஊழியராக இருந்து, அதே சமயம் ரிலையன்ஸ் பங்குதாரராகவும் இருப்பவர்கள் ஊழியர் பிரிவு (ரூ. 5 லட்சம் வரை), பங்குதாரர் பிரிவு (ரூ. 2 லட்சம் வரை) மற்றும் சில்லறை பிரிவு என மூன்று வெவ்வேறு பிரிவுகளில் தனித்தனியாக விண்ணப்பிக்க வாய்ப்பு பெறுகின்றனர்.
நீங்கள் சாதாரண தனிநபர் முதலீட்டாளராக இருந்தால், சில்லறைப் பிரிவை தேர்வு செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே ரிலையன்ஸ் பங்குகள் இருந்தால், ஷேர்ஹோல்டர் கோட்டாவை பயன்யன்படுத்துவதோடு, சில்லறை பிரிவிலும் சேர்த்து விண்ணப்பிப்பதன் மூலம் வாய்ப்பை அதிகரிக்கலாம். நீங்கள் ஜியோ நிறுவன ஊழியராக இருந்தால், ஊழியர் கோட்டா வழங்கும் கூடுதல் வரம்பு மற்றும் விலை தள்ளுபடியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
ஜியோ ஐபிஓவுக்கு விண்ணப்பம் செய்ய போட்டி அதிகமாக இருக்கிறது என்பதால் விண்ணப்பம் செய்யும் அனைவருக்குமே பங்கு கிடைக்காது. அதே வேளையில் சில்லறை பிரிவு விண்ணப்பங்களை விட பங்குதாரர்கள், ஊழியர்கள் பிரிவில் இருந்தால் பங்கு கிடைப்பதற்கான வாய்ப்பு சற்றே அதிகம். ஆனால் 100% உறுதியாக பங்கு கிடைக்கும் என சொல்ல முடியாது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

