மும்பை: கிரீன் எனர்ஜி துறையை சேர்ந்த ஒரு நிறுவனம் மல்டிபேக்கர் பங்காக மாறி முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை பெற்று தந்துள்ளது. முதன்முறையாக இந்நிறுவனம் பங்குகள் பிரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கேபிஐ கிரீன் எனர்ஜி நிறுவனம் (KPI Green Energy) விரைவில் தங்களின் பங்குகளை பிரிக்க இருப்பதாக பங்குச்சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தில் தெரிவித்துள்ளது.

இதன் படி 10 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட ஒரு பங்கானது 5 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட பங்காக பிரிக்கப்பட உள்ளது. எனவே கேபிஐ நிறுவனத்தில் நீங்கள் 10 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட 100 பங்குகள் வைத்திருந்தால், அது 5 ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட 200 பங்குகளாக மாற இருக்கிறது.
ஸ்டாக் ஸ்பிலிட்டுக்கான ரெக்கார்ட் தேதி என்பது அனைத்து பங்குதாரர்களின் அனுமதியை பெற்ற பிறகு அனுமதிக்கப்படும் என கேபிஐ நிறுவனம் பங்குச்சந்தை ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ஒவ்வொரு இரண்டு பங்குகளுக்கும் ஒரு பங்கு போனஸ் என போனஸ் பங்குகளை முதலீட்டாளர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது. அது தவிர ஈவுத்தொகையையும் வழங்கி வருகிறது.
கடந்த மாதம் கேபிஐ கிரீன் எனர்ஜி நிறுவனம் 74.3 மெகாவாட் மதிப்புள்ள சூரிய மின் சக்தி திட்டத்திற்கான ஒப்பந்தத்தை பெற்றது. இந்நிறுவனம் 2024ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் மட்டும் 292.96 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 184 கோடி ரூபாயாக இருந்து இந்த ஆண்டு 59%ஆக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் மொத்த லாபம் என்பது 2023ஆம் ஆண்டில் 109 கோடி ரூபாயாக இருந்து 2024ஆம் ஆண்டில் 47% அதிகரித்து 161.65 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது.
மே 23ஆம் தேதி பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு 1920.5 என வர்த்தகமானது. மே 22ஆம் தேதியை விட இது 2% அதிகமாகும். இந்நிறுவனமானது முதலீட்டாளர்களுக்கு 6 மாதங்களில் 140% லாபமும், ஓராண்டில் 430 % லாபமும் பெற்று தந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 1,100% உயர்ந்துள்ளது. எனவே இதில் முதலீடு செய்தவர்கள் பெருமளவில் லாபம் அடைந்துள்ளனர்.
டெலிகாம் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் அண்மையில் புதுப்பிக்க தக்க எரிசக்தி துறையில் கவனம் செலுத்த தொடங்கியது. சூரிய சக்தி மின் உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications