எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஐபிஓ இந்திய முதலீட்டு சந்தையில் பல பிம்பத்தை உடைத்துள்ளது என்றால் மிகையில்லை. இந்திய பங்குச்சந்தை பொருத்தவரையில் அதிக மதிப்புடன் அறிமுகமாகும் ஐபிஓ பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்தது. ஆனால் அக்டோபர் 14 பட்டியலிடப்பட்ட எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் 50 சதவீத ப்ரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டது மட்டும் அல்லாமல் வர்த்தக முடிவிலும் 48 சதவீத வரையிலான உயர்வை தக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐபிஓ-வில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்துள்ளது, எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒரு கொரிய நிறுவனம் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் அதன் தாய் நிறுவனத்தை விட இந்திய நிறுவனம் அதிகப்படியான சந்தை மதிப்பீட்டை பெற்று இன்று கொரிய முதலீட்டாளர்களுக்கே ஷாக் கொடுத்துள்ளது.

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு இன்றைய பட்டியலிடப்பட்ட பின்பு 13.07 பில்லியன் டாலர் அதாவது கிட்டத்தட்ட சுமார் ரூ.1.15 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதன் மூலம், தனது தென் கொரிய தாய் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடான 10 பில்லியன் டாலரை அதாவது ரூ.8,800 கோடி அளவீட்டை கடந்துள்ளது. இதுவே பெரும் சாதனை, தாய் நிறுவனத்தை காட்டிலும் கிளை நிறுவனம் அதிக மதிப்புடையதாக உள்ளது.
2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் அதிக முதலீட்டாளர்களை ஈர்த்த ஐபிஓ என்ற பெயரை எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பெற்றுள்ளது. ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான ஐபிஓக்களில், 2021 இல் வெளியான 'எட்டர்னல்' நிறுவனத்திற்குப் பிறகு, இதுவே சிறந்த ஐபிஓ ஆக விளங்குகிறது.
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டு விலையான ரூ.1140-ஐ விட அதிகமாக, பிஎஸ்இ-யில் ரூ.1715 ஆகவும், என்எஸ்இ-யில் ரூ.1710 ஆகவும் இன்று காலை பட்டியலிடப்பட்டது. எனினும், இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, எல்ஜி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஹாங் ஜூ ஜியோன் பங்குச்சந்தையில் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் பங்குகளை மணி அடித்து துவங்கி வைத்து இந்தியில் உரையாற்றியது பலரின் கவனத்தை ஈர்த்தது.
தென் கொரியரான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர், சில இந்தி வாக்கியங்களைப் பயன்படுத்துவார் என நினைக்கப்பட்ட நிலையில், தனது முழு உரையையும் இந்தியிலேயே பேசினார். இதுவும் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஐபிஓ-வின் சுவாரஸ்ய சம்பவமாக உள்ளது.
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஐபிஓ மீதான முதலீட்டாளர்களின் இந்த உற்சாகம், சுமார் 20 வருட வரலாற்றை மாற்றியுள்ளது. 2022 இல் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் 2.7 பில்லியன் டாலர் ஐபிஓ, 2021 இல் பேடிஎம்-ன் 2.5 பில்லியன் டாலர் ஐபிஓ, மற்றும் சோமேட்டோவின் 1.3 பில்லியன் டாலர் ஐபிஓ போன்றை கடந்து அதிக மதிப்புடைய ஐபிஓ என்ற பெயரையும் பெற்றுள்ளது.
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் 13.07 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு என்பது இதன் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 8.73 பில்லியன் டாலரை விட அதிகமாகும். இது இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள போட்டி நிறுவனங்களான வொர்ல்பூல் (சுமார் 1.67 பில்லியன் டாலர்), வோல்டாஸ் (5.16 பில்லியன் டாலர்), மற்றும் ஹேவல்ஸ் (10.42 பில்லியன் டாலர்) ஆகியவற்றை விட அதிகமாகும்.
இதற்கு மாறாக, அக்டோபர் 14 அன்று வெளியான டாடா கேபிடல் ரூ.330 இல் திறக்கப்பட்டது. இது 1.75 பில்லியன் டாலர் ஐபிஓ வெளியீட்டு விலையை விட 1.2% அதிகமாகும், ஆனால் டாடா கேபிடல் பங்குகள் மீதான வர்த்தகம் நாள் முழுவதும் மந்தமாகவே இருந்தது.


Click it and Unblock the Notifications