எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெற்றிகரமாக முடிந்த நிலையில் இன்று பங்குகள் இந்திய பங்குச் சந்தையில் 50% பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்டு, முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சி இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இது ஹூண்டாய் நிறுவனத்தை தொடர்ந்து மற்றொரு கொரிய நிறுவனத்திற்கு ஒரு சிறப்பான தொடக்கமாக அமைந்ததுள்ளது.
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டு விலையான ரூ.1140-ஐ விட அதிகமாக, பிஎஸ்இ-யில் ரூ.1715 ஆகவும், என்எஸ்இ-யில் ரூ.1710 ஆகவும் இன்று காலை பட்டியலிடப்பட்டது.

காலை வர்த்தகத்தின் போது எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஐபிஓ-வின் கிரே மார்க்கெட் பிரீமியம் (GMP) ரூ.430 ஆக இருந்தது. இது எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஐபிஓ-விற்கு கிடைத்த மிக உயர்ந்த GMP ஆகும். இந்த ஐபிஓ-வில் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஐபிஓ-விற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஐபிஓ இறுதி நாளில் 54.02 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் பெற்றது. எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஐபிஓ-வில் நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான ஆர்வம் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் (NSE) தரவுகளின்படி, மொத்தம் 7,13,34,320 பங்குகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், 3,85,33,26,672 பங்குகளுக்கு சப்ஸ்கிரிப்ஷன் பெறப்பட்டன.
தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் (QIBs) பிரிவில் அதிகபட்சமாக 166.51 மடங்கு சந்தா கிடைத்தது. நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் (NIIs) பிரிவில் 22.44 மடங்கும், சில்லறை முதலீட்டாளர்கள் (RIIs) பிரிவில் 3.54 மடங்கும் சந்தா பெற்றது.
சுமார் ரூ.11,607 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓ, ஒரு பங்குக்கு ரூ.1,080 முதல் ரூ.1,140 வரையிலான விலைப் அளவுகளில் வழங்கப்பட்டது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.77,400 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பட்டியலிடும் போதே 50% பிரீமியத்துடன் பிஎஸ்இ-யில் ரூ.1715 ஆகவும், என்எஸ்இ-யில் ரூ.1710 ஆகவும் இன்று காலை பட்டியலிடப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில் பிஎஸ்இ இன்று மாலை வர்த்தகம் முடியும் போது அப்பங்கு விலை ரூ.1689.40 ஆக நிலைபெற்றது. இது ஐபிஓ விலையிலிருந்து 48.19% அதிகம். என்எஸ்இ-யில் ரூ.1,682.80 ஆக முடிவடைந்தது, இது 47.61% அதிக மதிப்பாகும்.
முதல் நாள் வர்த்தகத்தில் சிறிய அளவிலான ரீடைல் முதலீட்டாளர்கள் லாபம் பார்க்கும் காரணமாக பங்குகளை விற்பனை செய்தனர், இதன் விளைவாகவே 1736 ரூபாய் வரையில் உயர்ந்த பங்குகள் வர்த்தக முடிவில் 1689 ரூபாயாக முடிந்தது.


Click it and Unblock the Notifications