நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதோடு, சிறந்த முதலீட்டாளர் என்பதை அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இந்திய பங்கு சந்தையில் இன்றும் சிறந்த உள்நாட்டு முதலீட்டாளர்கள் பட்டியலில் எல்ஐசி முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் 10 சிறந்த நிறுவனங்களில் செய்த முதலீடு காரணமாக , 65,500 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
நல்ல வருமானம்
மார்ச் 31 நிலவரப்படி, எல்ஐசியின் போர்ட்போலியோவில் உள்ள சிறந்த நிறுவனங்களில், 10 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கிட்டத்தட்ட 50% ஏற்றம் கண்டுள்ளன. ஆனால் இந்த காலகட்டத்தில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் முறையே 1.76% மற்றும் 0.49% சரிவினைக் கண்டுள்ளன. எல்ஐசி -யின் முதலீட்டு அணுகுமுறை, சந்தை சரிவுக்கு மத்தியிலும், லாபம் பார்க்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உதவியது குறிப்பிடத்தக்கது.
நல்ல லாபம்
பெரும்பாலான முதலீட்டாளர்கள் சந்தை சரிவின் போது தங்கள் வசம் இருந்த முதலீடுகளை விற்று வெளியேறியுள்ளனர். ஆனால் இந்த காலகட்டத்தில் எல்ஐசி குறைந்த விலையில் பங்குகளை வாங்கியது. இந்த நிலையில் தான் எல்ஐசி நல்ல லாபம் பார்த்துள்ளது.
என்னென்ன பங்குகள்?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஐடிசி லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐசிஐசிஐ வங்கி லிமிடெட், இன்ஃபோசிஸ் லிமிடேட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, லார்சன் & டூப்ரோ, ஹெச் டி எஃப் சி வங்கி மற்றும் ஹவுஸிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் முதலீடு செய்ததன் மூலம் லாபம் ஈட்டியுள்ளது. இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தில ஒரு சிறிய இழப்பினையும் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
போனஸ் கொடுக்க உதவலாம்
மேற்கண்ட 10 நிறுவனங்கள் மூலம் தான் நிறுவனம் 65,494 கோடி ரூபாய் லாபத்தினையும் எல்ஐசி பார்த்துள்ளது. இது எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு போனஸ் கொடுக்கவும், ஈவுத்தொகை கொடுக்கவும் உதவும் என இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர்.
முதலீட்டின் மதிப்பு
மார்ச் 31 நிலவரப்படி சிறந்த முதல் 10 நிறுவனங்களில் மட்டும் எல்ஐசி செய்துள்ள முதலீடுகள் மதிப்பு சுமார் 4.65 ட்ரில்லியன் ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது. எல்ஐசி மொத்தம் சுமார் 300 நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அவற்றின் மொத்த முதலீட்டு மதிப்பு சுமார் 9 ட்ரில்லியன் ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த நிறுவனம் எவ்வளவு லாபம்?
2023ம் நிதியாண்டில் டாப் கெயினர்களாக பார்க்கப்படும் நிறுவனங்களில் எல்ஐசி கணிசமன லாபத்தினை பதிவு செய்துள்ளது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முதலீட்டின் மதிப்பானது 13,121.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஐடிசி-யில் 17,994 கோடி ரூபாயும், டிசிஎஸ்-சில் 5926.7 கோடி ரூபாயும், ஐசிஐசிஐ வங்கியில் 4920 கோடி ரூபாயாகவும், இன்ஃபோசிஸில் 2662.8 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
நஷ்டமும் உண்டு
இதே போல எஸ்பிஐ, எல்&டி, ஹெச் டி எஃப் சி வங்கி மற்றும் ஹெச் டி எஃப் சி ஆகிய நிறுவனங்களில் எல்ஐசி கணிசமான லாபத்தினை பதிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவரில் 1379.7 கோடி ரூபாய் நஷ்டத்தினை பதிவு செய்துள்ளது. எனினும் எல்ஐசி இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications