இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி டாடா பவர் நிறுவனத்தில் தங்கள் வசம் இருந்த பங்குகளை கணிசமான அளவு விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. எல்ஐசி நிறுவனம் சரியான நிறுவனங்களை தேர்வு செய்து அதன் பங்குகளில் முதலீடு செய்து லாபம் காண்பதில் பெயர் பெற்றது.
பங்குச்சந்தை முதலீடுகளை பின்தொடரும் பலரும் எல்ஐசி நிறுவனம் எந்த துறையில் மற்றும் எந்த நிறுவன பங்குகளை வாங்குகிறது ,எந்த நிறுவன பங்குகளை விற்பனை செய்கிறது என்பன உள்ளிட்டவற்றை உன்னிப்பாக கவனிப்பார்கள்.

அந்த வகையில் எல்ஐசி நிறுவனம் அண்மையில் டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா பவர் லிமிடெட் நிறுவனத்தில் தங்கள் வசம் இருந்த 2,088 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது . இதன் மூலம் எல்ஐசி நிறுவனம் டாடா பவர் நிறுவனத்தில் தங்கள் வசம் இருந்த 2.02 சதவீத பங்குகளை விற்பனை செய்து விட்டது. தற்போது எல்ஐசி நிறுவனம் டாடா பவர் நிறுவனத்தில் 3.88 சதவீத பங்குகளை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் எல்ஐசி நிறுவனம் தாக்கல் செய்திருக்கக் கூடிய ஆவணத்தில் டாடா பவர் நிறுவனத்தில் தாங்கள் 18.87 கோடி பங்குகளை வைத்திருந்ததாகவும் தற்போது அதனை 12.39 கோடி என குறைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஜூன் 20 முதல் நவம்பர் 11ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலங்களில் இந்த பங்கு விற்பனை நடைபெற்றது என எல்ஐசி நிறுவனம் கூறியுள்ளது. ஒரு பங்கின் மதிப்பு 446.42 என்ற அளவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா குழுமத்திற்கு சொந்தமான துணை நிறுவனம்தான் டாடா பவர் நிறுவனம். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த செப்டம்பர் 30ம் தேதி உடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் 27% பங்குகளையும் வெளிநாட்டு நிறுவனங்கள் 9.17% பங்குகளையும் கொண்டுள்ளனர். மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் இதில் 9% பங்குகளிஅ கொண்டுள்ளன. நிறுவன உரிமையாளர்கள் 46.86% பங்குகளை வைத்திருக்கின்றனர். டாடா பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு நவம்பர் 14ஆம் தேதி அன்று 408.45 ரூபாய் என்ற அளவில் வர்த்தகம் ஆனது.
டாடா பவர் நிறுவன பங்குகளை விற்பனை செய்துவிட்டாலும் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிதி நிலைமை சீராகவே இருக்கிறது. இந்நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டை விட 3.7% குறைந்திருந்தாலும், பிரீமியம் வருமானம் 12% வரை வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications