இந்திய பங்குச்சந்தையில் அதிகப்படியான எதிர்பார்ப்புடன் ஐபிஓ வெளியிட்ட எல்ஐசி நிறுவனம் பட்டியலிடப்பட்ட முதல் நாளில் இருந்து மோசமான சரிவை பதிவு செய்து வந்தாலும், சில நாட்களில் சரிவை கட்டுப்படுத்தி நிலைப்பெற்றது.
ஜூன் 6ஆம் தேதி வாரத்தின் முதல் வர்த்தக நாளில் பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் மந்தமான வர்த்தகத்தையும், சரிவையும் எதிர்கொண்டது.
இதன் வாயிலாக எல்ஐசி பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் வரலாற்று சரிவை பதிவு செய்து ரீடைல் முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
எல்ஐசி பங்குகள்
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்தது. முதல் முறையாக எல்ஐசி பங்குகள் 800 ரூபாய் என்ற அளவீட்டை இழந்து 782.45 ரூபாய் வரையில் சரிந்தது.
எல்ஐசி பங்குகள் சரிவு
இன்றைய பங்குச்சந்தை காலை வர்த்தகத்தில் எல்ஐசி பங்குகள் 2.07 சதவீதம் குறைந்து ரூ.783.70 ஆகக் குறைந்துள்ளது, குறைந்தபட்சமாக 782.45 ரூபாய் என்ற நிலையை அடைந்தது. எல்ஐசி ஐபிஓ வெளியீட்டு விலையான ரூ.949ல் இருந்து, இதன் விலை 17 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.
ரூ.4.98 லட்சம் கோடி
எல்ஐசி பங்கு விலை வீழ்ச்சியுடன், நிறுவனத்தின் சந்தை மூலதனமும் ரூ.5 லட்சம் கோடிக்கு கீழே சரிந்து ரூ.4.98 லட்சம் கோடியாக உள்ளது. இதன் மூலம் எல்ஐசி நாட்டின் ஏழாவது மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது. எல்ஐசியின் பங்குகள் மே 17 அன்று பட்டியலிடப்பட்டது, அதன்பின் நான்கு நாட்கள் மட்டுமே பங்குகள் லாபத்துடன் முடிவடைந்தன, அதன் பின்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
நியூட்ரல் கணிப்பு
மேலும் அனைத்து சந்தை வல்லுனர்களும் எல்ஐசி பங்குகள் மீது நியூட்ரல் கணிப்பை மட்டுமே தெரிவித்துள்ளது. இதேபோல் எம்கே குளோபல் நிறுவனம் எல்ஐசி-யை "the elephant that cannot dance" என்று விமர்சனம் செய்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தை வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று 300 புள்ளிகள் சரிவுடன் துவங்கியுள்ளது. டெக் மற்றும் உலோக துறை பங்குகள் அதிகளவிலான சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவில் தள்ளாடுகிறது. மேலும் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகள், ஐரோப்பா மற்றும் இந்திய மத்திய வங்கிகளின் வட்டி விகித முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர். இந்த முடிவுகள் சந்தை முதலீட்டில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications