சென்னை: மத்திய அரசு, 2024 நவம்பர் 1 முதல் சர்க்கரை ஆலைகளுக்குச் சர்க்கரை சாறு அல்லது சிரப் மூலம் எத்தனால் உற்பத்தி செய்ய அனுமதிக்கும் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 13% வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுத்துள்ளது.
பல்ராம்பூர் சினி மில்ஸ் பங்கு 8.15% உயர்ந்து அதன் வரலாற்று உச்ச அளவான ரூ.625.85க்கு உயர்ந்தது. அதே நேரத்தில், ப்ராஜ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 7.6% உயர்ந்து இன்றைய அதிகப்படியான ரூ.785க்கு உயர்ந்தது. இதேபோல் பிரபலமான ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் பங்குகள் 9.8% உயர்ந்து ரூ.52.01 எட்டியது.

இதற்கிடையில், டால்மியா பாரத் சுகர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் குளோபஸ் ஸ்பிரிட்ஸ் ஆகியவற்றின் பங்குகளும் முறையே 13% மற்றும் 13.2% உயர்ந்த பின்னர், ரூ.499.20 மற்றும் ரூ.1,019.15 என இரு பங்குகளும் தனது புதிய 52 வார உயர்வுகளை எட்டின.
பிற சர்க்கரை உற்பத்தி நிறுவனப் பங்குகளான தம்பூர் சுகர் மில்ஸ், மாவனா சுகர்ஸ், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் & கெமிக்கல்ஸ் மற்றும் ஸ்வரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் விலை உயர்வைக் கண்டன. இந்த நிறுவனங்களின் பங்குகளும் இன்று மும்பை பங்குச்சந்தையில் 7-9% உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 29, 2024 அன்று மத்திய அரசு வெளியிடப்பட்ட அறிவிப்பில், நாட்டில் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் சர்க்கரை உற்பத்திக்கான மூலப்பொருட்களைத் திசை திருப்ப முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. இதனால் சந்தையில் கிடைக்கும் சர்க்கரைக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மத்திய அரசு இதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய மாற்றத்தின் மூலம் சர்க்கரை சாறு மற்றும் சிரப்புகளுக்கு கூடுதலாக, புதிய கொள்கையில் B-Heavy மோலசஸ் மற்றும் C-Heavy மோலசஸ்களை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த அனுமதிக்கிறது. மேலும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகத்தின் அறிவிப்பில், "சர்க்கரை ஆலைகள் மற்றும் டிஸ்டில்லரி தொழிற்சாலைகள், OMC களுடன் உள்ள ஒப்பந்தத்தின்படி, ESY 2024-25 இல் சர்க்கரை சாறு / சர்க்கரை சிரப், B-Heavy மோலசஸ் மற்றும் C-Heavy மோலசஸ் ஆகியவற்றிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படுகின்றன."
இந்த மாற்றம் மத்திய அரசு புதுப்பிக்கத்தக்க எனர்ஜியை பயன்பாட்டை அதிகரித்து, எரிபொருள் தேவைக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கான எத்தனால் கலப்பு விகிதத்தை அதிகரிக்கவும், இலக்குகளை அடையவும் அதிகமாக எத்தனால் உற்பத்தி செய்ய இந்த கொள்கை மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளது.
இதோடு மத்திய அரசு எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கக் குறிப்பாக இந்திய உணவு கழகத்திலிருந்து 2.3 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி வாங்க டிஸ்டில்லரி தொழிற்சாலைகளை அனுமதித்துள்ளது. இந்த நடவடிக்கை எத்தனால் வெளியீட்டை அதிகரித்து, எரிபொருள்களுடன் எத்தனால் கலப்பதை ஆதரிக்கும்.
இதேபோல் இந்த கொள்கை மாற்றத்தால் நாட்டில் சர்க்கரை கிடைக்கும் அளவு (சப்ளை - டிமாண்ட்) பாதிக்காதபடி உறுதிசெய்ய, உணவு மற்றும் பொது விநியோகம் துறை (DFPD) மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (MoPNG), எத்தனால் உற்பத்திக்குச் சர்க்கரை மூலப்பொருட்களைத் திசை திருப்புவதைக் கண்காணித்து ஆய்வு செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications